வரும் 15ல் தி.மு.க., முப்பெரும் விழா
சென்னை: ஆண்டுதோறும் தி.மு.க., சார்பில் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, வரும் 15-ம் தேதி, சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடக்கிறது.
தி.மு.க., வளர்ச்சிக்காக, நீண்ட காலமாக பங்காற்றி வரும், முக்கிய நிர்வாகிகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும் அக்கட்சியின் சார்பில், விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டிற்கான ஈ.வெ.ரா., விருது - விவசாய அணி துணை செயலர் செல்லப்பா; அண்ணா துரை விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சுபாஷ்;
கருணாநிதி விருது - துணை பொதுச்செயலர் திருச்சி சிவா; பாரதிதாசன் விருது - மருத்துவ அணி தலைவர் கனிமொழி சோமு; அன்பழகன் விருது - தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி; ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணை செயலர் இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.
வரும் 15ம் தேதி நடைபெறும், தி.மு.க., முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று, விருது பெறுவோருக்கு, பொற்கிழி வழங்குவார் என, தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.