வெற்றிப் பயணம் திட்டம்: டிக்கெட்டில் ஏறும், இறங்குமிடம் குறிப்பிட வேண்டும், அபராதம் கூடாது
வெற்றிப் பயணம் திட்டம்: டிக்கெட்டில் ஏறும், இறங்குமிடம் குறிப்பிட வேண்டும், அபராதம் கூடாது - நெறிமுறைகள் என்னென்ன?
கட்டணம் இல்லா டிக்கெட் வழங்காமல் விடுதல் அல்லது தவறாக பயன்படுத்துதல் விதிகளின்படி நடவடிக்கைக்குரியதாகும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
Published : October 5, 2026 at 12:28 PM IST
சென்னை: வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் பேருந்தில் ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்து கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்க வேண்டும் என்றும், டிக்கெட் இல்லாத தகுதியான பயணியிடமிருந்து அபராதம் வசூலிக்கக் கூடாது என்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வெற்றிப் பயணம்" திட்டத்தின் கீழ் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜ் வெளியிட்டுள்ளார்.
அதில் ”வெற்றிப் பயணம் திட்டம் 2.10.2026 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநகர, நகர்ப்புற Ordinary, Express, L.S.S., Deluxe, புறநகர் Ordinary மற்றும் மலைப்பகுதி Ordinary சேவைகளில் மகளிர், சிறுமியர் மற்றும் திருநர் பயணிகள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
இந்த திட்டத்தில் பயனடைவதற்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. பயணங்களின் எண்ணிக்கைக்கும் வரம்பில்லை. இத்திட்டத்தை எளிமையாகவும். ஒரே மாதிரியான நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும். வெற்றிப் பயணம் திட்டத்தில் இடம்பெறும் வழித்தடங்களின் Route Master, Service Master விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தகுதியான சேவையும் ETM, மென்பொருள் அமைப்பில் சரியாக இணைக்கப்பட வேண்டும். கட்டணம் இல்லாத டிக்கெட் உருவாக்கம் முன்கூட்டியே சோதித்து உறுதி செய்யப்பட வேண்டும்.
தடையில்லாமல் டிக்கெட் வழங்க வேண்டும்
தேவையான அளவு செயல்படும் ETM கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றின் சார்ஜிங், இணைப்பு வசதிகள் செயல்பாட்டில் இருப்பது உறுதி செய்ய வேண்டும். ETM பழுது ஏற்பட்டால் உடனடியாக Service Call பதிவு செய்து, மாற்று நடைமுறை மூலம் கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கல் தடையின்றி தொடரப்பட வேண்டும்.
டிஜிட்டல் வழித்தட பலகை உள்ள பேருந்துகளில் "வெற்றிப் பயணம்" தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் வழித்தட பலகை இல்லாத பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட "வெற்றிப் பயணம்" ஸ்டிக்கர் மட்டும் ஒட்ட வேண்டும்.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு திட்டத்தின் தகுதி, கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கும் முறை, பயணிகள் சேவை மற்றும் புகார் கையாளும் நடைமுறை குறித்து பணிமனை அளவில் முன்கூட்டியே விளக்கக் கூட்டம் நடத்த வேண்டும்.
மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஒவ்வொரு தகுதியான பயணத்திற்கும் கட்டணம் இல்லாத டிக்கெட் கட்டாயமாக வழங்க வேண்டும். கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்காமல் விடுதல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் விதிகளின்படி நடவடிக்கைக்குரியதாகும்.
கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கும் நடைமுறை
சாதாரண பேருந்து சேவைகளில் தற்போது நடைமுறையில் உள்ள டிக்கெட் நடைமுறை மாற்றமின்றி தொடர வேண்டும். Town Express, L.S.S, Deluxe, Mofussil Ordinary w Ghat Ordinary ஆகிய பேருந்துகளில் கட்டணம் இல்லாத டிக்கெட் பயணியின் ஏறுமிடமும், இறங்குமிடம் விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.
ETM செயலிழந்தால், முன் அச்சிடப்பட்ட கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்க வேண்டும். தேவையான ஏறும், இறங்கும் இடம் , கட்டண விவரம், பயணிகளின் எண்ணிக்கை, தடம் எண் மற்றும் தேதி ஆகியவை Waybill, Ticket Register-ல் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
டிக்கெட் பரிசோதகர்கள், சோதனை அலுவலர்கள், பேருந்தில் பயணம் செய்யும் தகுதியான மகளிர், திருநர் பயணிகளுக்கு கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதா? என்பதையும், சேவை வகை, வழித்தடம் மற்றும் அட்டவணை முறையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
டிக்கெட் இல்லாத பயணியிடம் அபராதம் வசூலிக்கக்கூடாது
கட்டணம் இல்லாத டிக்கெட் இல்லாத தகுதியான பயணியிடமிருந்து அபராதம் வசூலிக்கக் கூடாது. Inter-State Passing-through Ordinary தமிழ்நாட்டிற்குள் இருந்தால் மட்டுமே கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கப்பட வேண்டும். வழித்தடம் இடையில் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசம் வழியாகச் சென்றாலும் இச்சலுகை தொடரும்.
பயணியின் ஏறும் இடம் அல்லது இறங்கும் இடம் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசத்தில் இருந்தால் நடைமுறையிலுள்ள Fare Ticket வழங்கப்பட வேண்டும். இதற்கேற்ப ETM, மென்பொருள் அமைப்பில் தேவையான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
ETM மென்பொருளில் வெற்றிப் பயணம் திட்டத்திற்கான கட்டணம் இல்லாத டிக்கெட் மற்றும் தேவையான அறிக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். Town Ordinary சேவைகளைத் தவிர பிற சேவைகளில் ஏறும் மற்றும் இறங்கும் விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்படும் வகையில் மென்பொருள் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சேவை வகை வாரியாக தினசரி ,மாதாந்திர அறிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்ட கட்டணம் இல்லாத டிக்கெட்-களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு சேவை வகை வாரியாகத் தொகுக்கப்பட வேண்டும். ETM பதிவுகள், Manual ZERO Ticket, Waybill ,Ticket Register, தினசரி டிக்கெட் விவரங்கள் மற்றும் கணக்குப் பதிவுகள் ஒன்றோடொன்று ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை
முக்கிய பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கள கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நெரிசல், நீண்ட காத்திருப்பு, தாமதம் மற்றும் சேவை குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாகத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேர அட்டவணைப்படி பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களிலேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக ஏறவும் இறங்கவும் போதுமான நேரம் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து வெற்றிப் பயணம் பேருந்துகளும் நல்ல பராமரிப்பு மற்றும் இயக்கத் தகுதி நிலையில் இருக்க வேண்டும். தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் மாற்றுப் பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட வேண்டும்.
Not Run, Late Run, Curtailment, Route Diversion முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக காலை, மாலை நெரிசல் நேரங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் சேவைகள் அட்டவணைப்படி இயக்கப்பட வேண்டும்.
புகார் அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு
வெற்றிப் பயணம் தொடர்பான புகார்கள் பொதுவான கட்டணமில்லா எண் 149 மூலம் தனியாகப் பதிவு செய்யப்பட்டு, போக்குவரத்துக் கழகம், மண்டலம், கிளைவாரியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் இணை மேலாளர், புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே புகாரை முடித்து வைக்க வேண்டும்.
வெற்றிப் பயணம் திட்டம் தடையின்றி பயணிகளுக்கு எளிதாகவும், ஒரே மாதிரியான நடைமுறையில் செயல்படுவதையும், கட்டணம் இல்லாத டிக்கெட் பதிவுகள், கணக்கீடு, இழப்பீட்டுத் தொகை மற்றும் தணிக்கை நடவடிக்கைகள் தெளிவாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.