‘வெளியேறுவோம்!’
‘வெளியேறுவோம்!’ - முதல்வரை எச்சரிக்கும் திருமா!
‘த.வெ.க கூட்டணியில்தான் வி.சி.க இருக்கிறதே!’ என்று கேட்டோம். “வி.சி.க இருப்பதால் பா.ம.க வாக்குகள் வராது என்ற ஃபார்முலாவெல்லாம் அந்தக்காலம்
த.வெ.க அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் சூழல் உருவாகிவிட்டதாகப் பேசப்படும் நிலையில், ‘சாதியவாத பா.ம.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. த.வெ.க - வி.சி.க இடையே என்னதான் நடக்கிறது என விசாரித்தோம்.
காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் கட்சிகளின் ஆதரவில் ஆட்சி நடத்தி வரும் த.வெ.க., செப்டம்பர் 9-ம் தேதி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியை உருவாக்கி அறிவித்தது. த.வெ.க ஆட்சிமீது கம்யூனிஸ்ட்டுகள் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், ஆட்சியின் பாதுகாப்புக் காக பா.ம.க-வின் நான்குஎம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற திரைமறைவில் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது த.வெ.க. இந்த விவகாரம் வி.சி.க-வினர் மத்தியில் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செப்டம்பர் 30-ம் தேதி ஃபேஸ்புக் நேரலையில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “பா.ம.க., பா.ஜ.க இருக்கும் அணியில் வி.சி.க இடம்பெறாது என்று கடந்த 15 வருடங்களாகச் சொல்லிவருகிறோம். அந்த நிலைப்பாட்டை ஒரு வாய்ப்பாகக் கருதி, த.வெ.க கூட்டணியில் பா.ம.க இடம்பெறப் போகிறது என்ற வதந்தியைத் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்” என்றார். அதைத் தொடர்ந்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு “மதவாத பா.ஜ.க., சாதியவாத பா.ம.க-வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை” என்று சொல்லியிருக்கிறார். வி.சி.க தரப்பினரின் கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “கூட்டணி விவகாரங்கள் குறித்து தலைமைதான் முடிவெடுக்கும்” என்று நழுவினார். “திருமா, வன்னி அரசு ஆகியோரின் இந்த ஸ்டேட்மென்ட்டுகளை வைத்துப் பார்க்கும்போது ‘பா.ம.க-வை த.வெ.க கூட்டணிக்குள் கொண்டுவந்தால், வி.சி.க வெளியேறிவிடும்’ என்பதுதான் செய்தி” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
த.வெ.க நிர்வாகிகள் சிலரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரித்தோம். “கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பினோம். ஆனால், அவர்கள் தி.மு.க குரலில் ஒலிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனியும் அவர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி நடத்துவது சரியாக இருக்காது. எனவே, பா.ம.க-வின் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று, அந்தக் கட்சியை அமைச்சரவைக்குள் கொண்டுவருவதுதான் எங்களின் பிளான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல்கூட எங்களால் தலித் சமூக வாக்குகளை எளிதாகப் பெற முடியும், ஆனால், பா.ம.க-வை உள்ளே கொண்டுவந்தால்தான் வன்னியர் சமூக வாக்குகளைக் கணிசமாகப் பெற முடியும் என்று நினைக்கிறோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கின்றன. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிக்கும் மனநிலையில்தான் பா.ம.க இருந்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பா.ம.க-வை நடுநிலை வகிக்க வைத்தோம். எனவே, இடைத்தேர்தலுக்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்றிவிட்டு, பா.ம.க-வைக் கட்டாயம் உள்ளே கொண்டுவருவோம். செளமியா அன்புமணியை வேளாண்துறை அல்லது நீர்வளத்துறை அமைச்சராக்கும் திட்டமும் இருக்கிறது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு இதற்கான காய்கள் நகர்த்தப்படும்” என்றனர்.
வி.சி.க துணைப் பொதுச்செயலாளர்கள் சிலரிடம் பேசியபோது, “அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க., இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரளிக்காமல் இருப்பதே எங்களுக்கு பலத்த சந்தேகத்தைத் தருகிறது. அதைத் தொடர்ந்து பா.ம.க அமைச்சரவைக்குள் வரப்போகிறது என்று ஒரு வார காலமாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவரும் நிலையில், த.வெ.க தரப்பு அதை மறுக்கவே இல்லை. வன்னியர் வாக்குகளுக்காகவும், ஆட்சியைப் பாதுகாப்பாக நடத்திக்கொள்ளவும் த.வெ.க முயல்கிறது. அதற்காக எங்கள் கொள்கையில் சமரசம் செய்தால் வி.சி.க-வின் எதிர்காலம் பாழாகிவிடும். எனவே, ‘பா.ம.க வந்தால் நாங்கள் வெளியேறுவோம்’ என்பதைத்தான் எங்கள் தலைவர் திருமா அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் “பா.ம.க-வை அவசரகதியில் த.வெ.க கூட்டணிக்குள் இணைக்கவேண்டிய தேவையும் த.வெ.க-வுக்கு ஏற்பட்டி ருக்கிறது. ஒன்று, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவில் ஆட்சி நடத்துவதில் முதல்வர் விஜய்க்கு விருப்பமில்லை. மற்றொன்று, இடைத்தேர்தலில் த.வெ.க சறுக்கினால், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைந்து ஆட்சியமைக்கும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள். பா.ம.க-வை முன்னிலைப்படுத்தவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அதைத் தகர்க்கவே பா.ம.க-வை உள்ளே கொண்டு வரத் துடிக்கிறது த.வெ.க. எனவே பா.ம.க-வைச் சகித்துக்கொண்டால்தான் த.வெ.க-வின் அமைச்சரவையில் தொடர முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது வி்.சி.க” என்றனர்.
ஆக, இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அரசியல் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது!