📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 10, 2026 12:00 AM

“எனக்கு இப்படியா நடக்கணும்?” நொந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. மூன்று போட்டியிலும் சொதப்பல்

“எனக்கு இப்படியா நடக்கணும்?” நொந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. மூன்று போட்டியிலும் சொதப்பல்

“எனக்கு இப்படியா நடக்கணும்?” நொந்து போன வைபவ் சூர்யவன்ஷி.. மூன்று போட்டியிலும் சொதப்பல்

பிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியிலும் இளம் துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். தான் ஆட்டமிழந்ததை அறிந்த உடன் நொந்து போன முகபாவனையுடன் வைபவ் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் பெரிய ரன்கள் குவிக்காமல் சொதப்பி இருக்கிறார்.

மேலும், தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும் குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா என தங்களை நிரூபித்த இரண்டு துவக்க வீரர்களை விட 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன் என ரசிகர்கள் பலரும் 'பில்டப்' கொடுத்த வந்த நிலையில் அந்த பிம்பம் ஆட்டம் கண்டுள்ளது.

பிரிஸ்டலில் நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீரராகக் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின் 2-வது ஓவரில் ஜோஷ் டங் பந்துவீச்சில் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 150 ஸ்டிரைக் ரேட்டுடன் அதிரடி காட்ட முயன்றார். ஆனால், 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை சிக்ஸ் ஆக தூக்கி அடிக்க முயன்று, சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தன்னுடன் விளையாடும் சக வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை பறிகொடுத்தார். ஆட்டமிழந்த பிறகு அவர் மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் மைதானத்தை விட்டு வெளியேறினார். கடந்த மூன்றாவது டி20 போட்டியிலும் வைபவ் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜூலை 4 அன்று மான்செஸ்டரில் நடைபெற்ற தனது அறிமுகப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் ஜூலை 7 அன்று டிரெண்ட் பிரிட்ஜில் நடந்த போட்டியில் 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது தனது 3-வது சர்வதேச போட்டியிலும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

அதிரடியாக விளையாடி 1 அல்லது 2 சிக்ஸர்களை அடித்தவுடன், ஆட்டத்தின் சூழலைப் புரிந்து கொள்ளாமல் விக்கெட்டுகளை வாரி வழங்கும் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம் விமர்சனத்தை சந்திக்கத் துவங்கி உள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சனை வெறும் 3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என கம்பீர் நீக்கி இருக்கும் நிலையில் வைபவ் சூர்யவன்ஷியையும் நீக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.