வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அக்.10- ஆம் தேதி மாவட்டங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published : October 7, 2026 at 9:16 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு நடவடிக்கை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதால் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சிறப்பு நடவடிக்கைள் இன்று (அக்.07) முதல் அக்.09- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (அக்.07) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியத் தேர்தல் ஆணையம், செப்.29 மற்றும் அக்.01 ஆகிய தேதியிட்ட தனது கடிதங்கள் மூலம், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம், முதல்முறை வாக்காளர்களாகத் தகுதிப் பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அக்.10-ல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்
அதன்படி, இன்று (அக்.07) அக்.08, 09 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் நடத்தப்படும். இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாகத் தகுதிப் பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் அக்.10- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடத்தப்படும். முதல்முறை, இளம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படும்.
மேலும், தகுதியுடைய இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் (Electoral Literacy Clubs) சேவைகள் திறம்படப் பயன்படுத்தப்படும். சிறப்பு இயக்கம் குறித்து ஊடகங்கள் மூலமாகவும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலமாகவும் பரவலான விளம்பரம் செய்யப்படும்.
சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்துக் கண்காணிப்பதற்கும், அறிவுறுத்தல்களைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதிச் செய்வதற்கும், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.