📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 03, 2026 04:04 PM

உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஏஐ

உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஏஐ

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து 14வது மாதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

மத்திய கிழக்குப் பூசல் தொடர்வதால் எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இது, உலகப் பொருளியலை வெகுவாகப் பாதித்துள்ளது.

இருந்தாலும் செயற்கை நுண்ணறிவுக்கான தேவை வலுவாக இருந்ததால் சிங்கப்பூரின் உற்பத்தித்துறை வளர்ச்சி கண்டுள்ளது.

சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் ஒட்டுமொத்த நிலையை அளவிடும் கொள்முதல் மேலாளர் குறியீடு (பிஎம்ஐ) ஆகஸ்ட் மாதத்தில் 51.5 புள்ளிகளிலிருந்து செப்டம்பரில் 51.7 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இது, அக்டோபர் 2018க்குப் பிறகு புதிய உச்சமாகும்.

பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருப்பது வளர்ச்சியையும் 50க்குக் கீழ் இருப்பது வளர்ச்சி சுருங்குவதையும் குறிக்கிறது.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் மின்னணுத் துறையின் பங்கு மட்டும் 40 விழுக்காடு. அத்துறை தொடர்ந்து 16வது மாதமாக வளர்ச்சியடைந்து 52.9 புள்ளிகளாக பிஎம்ஐ குறியீடு பதிவாகியுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளியல் நிபுணரான சுவா ஹான் டெங், “சிங்கப்பூர் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு மின்னணுவியல் துறையே முதன்மை காரணம். ஆனால் அதற்கு, உலகளாவிய ஏஐயின் வளர்ச்சி பக்கபலமாக இருந்துள்ளது,” என்றார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிங்கப்பூர் கொள்முதல், பொருள் மேலாண்மை நிறுவனத்தின் (எஸ்ஐபிஎம்எம்) நிர்வாக இயக்குநரான ஸ்டீபன் போ, மின்னணுத் துறையானது உற்பத்தித் துறையில் வளர்ச்சி, வேலைவாய்ப்பிற்கு ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், மூலப்பொருள்களின் விலை உயர்வு, விநியோகத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் போன்றவை உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

புதிய தேவைகள், புதிய ஏற்றுமதிகள், தொழிற்சாலை உற்பத்தி, மூலப்பொருள் இருப்புகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி செப்டம்பர் மாதத்தின் பிஎம்ஐ குறியீட்டை உயர்த்தியது.