தவெக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்
தவெக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் - மதுராந்தகத்தில் டிடிவி தினகரன் பேச்சு
"கத்தி எடுத்தவர்கள் கத்தியாலேயே விழுவார்கள். அதுபோல, தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களாலேயே ஆட்சி கவிழும் நிலை ஏற்படக்கூடும்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Published : October 1, 2026 at 9:09 PM IST
செங்கல்பட்டு: தவெக ஆட்சிக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத்தை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "தவெக அரசு தோல்வி பயத்தில் உள்ளது. திமுக, அண்ணாவால் உருவாக்கப்பட்டது. அதிமுக, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. இதைக் கூட ஒழுங்காகப் பேச முடியாத வகையில் தற்குறித்தனமாக தவெகவினர் பேசி வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்? அவர்கள் விஜய் ரசிகர்களா? அவர்களை எம்ஜிஆரும், அம்மாவும் உருவாக்கினார்கள். தவெக ரீல்ஸ் மூலமாக ஆட்சியைப் பிடித்தது. தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகியும் இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் செய்யவில்லை.
இந்த ஆட்சியில் மின்வெட்டு மட்டுமே வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிற்சாலைகள் எப்படி செயல்படும்? பொதுமக்கள் வெயிலில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் பேசி வருகிறார். ஆனால், விவசாயிகள் தற்போதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடியையும் விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடியையும் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேட்டூர் அணையைத் திறப்பதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் பல கோடி ரூபாய் செலவு செய்து படப்பிடிப்பு நடத்தியது மட்டுமே மிச்சம்.
இதேபோல், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் வேட்பாளர் சத்தியபாமாவை வைத்து படப்பிடிப்பு நடத்துகின்றனர். இதேபோல், மதுராந்தகத்திலும் வேட்பாளரை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள்.
வாக்களித்த மக்கள், இந்தத் தேர்தலை விரும்பவில்லை. இந்த தேர்தலைத் திணித்தவர் விஜய். கடந்த ஆட்சியைவிட தற்போதைய ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.
கத்தி எடுத்தவர்கள் கத்தியாலேயே விழுவார்கள். அதுபோல, தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களாலேயே ஆட்சி கவிழும் நிலை ஏற்படக்கூடும். அந்த அச்சம் காரணமாகவே முதலமைச்சர் விஜய் உளறி வருகிறார். திருப்பரங்குன்றத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும். இதுதான் எங்களுக்கு கிடைத்து வரும் முக்கியத் தகவலாக உள்ளது.
மக்களிடம் ஏமாற்று வேலை செய்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார்.