தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் தமிழகம் முதலிடம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத் துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுதான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதல்வரோ லண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு ரூ.35 கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம்.
திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா? இது யார் வீட்டுக் காசு சார்? அதிமுகவில் இருந்து மேலும் 15 பேரை பர்ச்சேஸ் செய்யப் போகிறோம் என்று வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள்.
இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.
வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலதான் தவெக அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆர்ப்பாட்டம்
‘எல் நினோ மழையின் தீவிர அபாயங்களை அலட்சியப்படுத்தி வரும் தமிழக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என, திமுக மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.