தோண்டி துருவிய விஜய்....வீரமணி ஜெயில் க்ளைமாக்ஸ்!
தோண்டி துருவிய விஜய்....வீரமணி ஜெயில் க்ளைமாக்ஸ்!
‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலகையே அதிரவைத்த 'எப்ஸ்டீன் ஃபைல்ஸ்' போன்ற வக்கிர வெறியாட்டம், தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவரின் வக்கிர சகாக்களால் நிகழ்த்தப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களும் சிறுமிகளும் அடுத்தடுத்து துணிச்சலாக புகார் அளித்துக்கொண்டிருக்கும் நிலையில், வீரமணி அண்ட் கோவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடங்கி, அரசியல் பிரமுகர்கள் வரை பலரது பெயர்கள் பலமாக அடிபடும் இந்த வீரமணி விவகாரத்தின் க்ளைமாக்ஸ் என்ன, பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்குமா என்பதுதான் ஈர நெஞ்சம்கொண்ட ஒவ்வொருவரும் பதைபதைப்புடன் எழுப்பும் ஒற்றை வினா!
சென்னையைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழும நிறுவனங்களின் தலைவருமான 84 வயதான வீரமணி மற்றும் மகேந்திர சிம்ஹன் சாந்தி என்ற தம்பதியை கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி போக்ஸோ வழக்கில் சென்னை குற்றப் பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸ் கைது செய்திருந்தது. இதுகுறித்து செப்டம்பர் 4ம் தேதி வெளியான 'குமுதம் ரிப்போர்ட்டர்' இதழில், 'பிள்ளைக்கறி தின்ற கொடூரன். தமிழகத்தில் ஒரு எப்ஸ்டீன் ஃபைல்ஸ்' என்று விரிவாக எழுதியிருந்தோம்.
இந்த நிலையில், பணம் மற்றும் அதிகார பலம் எப்படியெல்லாம் வக்கிரக் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றன. இதில் எந்தெந்த உயரதிகாரிகள் வரை தொடர்புகள் நீண்டன என்பது குறித்து ஏராளமான அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்த விவரமறிந்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். "கிரானைட் தொழிலின் 'முடிசூடா மன்னன்', தன்னம்பிக்கைப் பேச்சாளர்' என்றெல்லாம் வெளியுலகிற்கு தன் முகத்தை காட்டிய 'ஜெம்' வீரமணியின் கொடூர முகம் இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
அதாவது, கடந்த 06.10.2025 அன்று சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளரிடம் தன்னார்வலர் ஒருவர், கடந்த 2019ம் ஆண்டு, 13 வயது சிறுமியிடம், தொழிலதிபர் வீரமணி பாலியல் அத்துமீறலை நிகழ்த்திய வீடியோ பதிவொன்று கிடைத்திருக்கிறது. அது. போயஸ் கார்டன் பகுதியில் உள்ள சாந்தி என்பவர் வசிக்கும் பங்களாவில் நடந்திருக்கிறது' என அந்த வீடியோ ஆதாரத்தோடு புகார் அளித்திருந்தார். மறுநாளே எஃப்ஐ.ஆர் பதியப்பட்டது என்றாலும் விசாரணை சென்ற போக்கு... 'வீரமணியை இதுநாள்வரை தப்பிக்கவிட்டது யார்? என்ற கேள்வியை இயல்பாகவே எழ வைக்கிறது.
விசாரணையை முடக்க நினைத்த காவல்துறை... முடுக்கிவிட்ட நீதிமன்றம்!
ஏனெனில், வழக்கை விசாரித்துவந்த ஏ.வி.எஸ். போலீஸ், இந்தாண்டு பிப்ரவரியில் சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 'வீடியோவில் உள்ள சிறுமி யாரெனக் கண்டறிய எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. சந்தேகிக்கப்பட்ட வீரமணியோ, 'அது நானில்லை' என சொல்லிவிட்டார். சாந்தியும் அது என் வீடல்ல. வெளியாட்களை வீட்டின் உள்ளே விடமாட்டோம் என சொல்லிவிட்டார்.
சிறுமி தொடர்பான வீடியோ ஆறு ஆண்டுகள் பழையது என்பதால், சைபர் வல்லுநர்களாலேயே சாந்தி வீட்டிலுள்ள சிசிடிவி வீடியோக்கள் எதையும் ரெக்கவரி செய்ய முடியவில்லை. சிறுமி யாரெனக் கண்டறிய முடியவில்லை. அந்த வீட்டின் அருகிலுள்ள பஞ்சர் கடைக்காரர் வரை விசாரித்துவிட்டோம். எந்த தகவலும் கிடைக்கவில்லை. போலீஸ் பதிவேட்டிலும் வீரமணி, சாந்தி மீது எவ்வித ரெக்கார்டும் கிடையாது. எனவே விசாரணையை கைவிடுகிறோம். இது இறுதியறிக்கை (எஃப்.ஏ.டி) என்று சொல்லியிருக்கிறார்கள்.
வீடியோ ஆதாரமே இருக்கக்கூடிய இந்த விவகாரத்தில் போலீஸ் இவ்வளவு அலட்சியமாக பதில் சொல்லி, வழக்கை முடிக்க முயல்வது ஏன்? என்ற சந்தேகம் சாதாரணமாகவே எழுகிறது. எனவே, போலீஸ் சொல்வதை ஏற்க மறுத்த நீதிமன்றம், கடந்த ஜூலையில் உடனடி மேல் விசாரணைக்கு உத்தரவிட்டது. (இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது) இதையடுத்து சென்னை மாநகர ஆணையர் அமல்ராஜ் உத்தரவுப்படி விசாரணை தீவிரமடைந்தது.
வீடியோ உண்மை எனவும், அதிலிருப்பது ஜெம் வீரமணிதான் என்பதையும் உறுதிப்படுத்தி வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மகேந்திர சிம்ஹன் சாந்தி தம்பதியையும் கைது செய்தனர். மேலும் மேலதிகாரிகள் சிலர் வீரமணியிடம் கைங்கரியம் பெற்றதாலேயே விசாரணையை முடிக்கப் பார்த்ததும் தெரியவந்தது. இதன் பின்னணியில், வீரமணி மற்றும் தம்பதியிடம் போலீஸ் புழல் சிறையிலேயே ஸ்பெஷல் விசாரணை செய்தபோதுதான் பல திடுக் பின்னணிகள் வெளிவர தொடங்கியிருக்கின்றன.
ஏழை சிறுமிகளே டார்கெட்!
அதாவது, வீரமணிக்கு நீண்டகாலமாக தெரிந்தவர்தான் இந்த சாந்தி அவர் மூலமாகவும் அவரின் கணவர் மூலமாகவும் 13 முதல் 16 வயது சிறுமியர்கள் பலரை ஏற்பாடு செய்ய வைத்து, அவ்வப்போது தனது பாலியல் வக்கிரத்திற்கு தீனிபோட்டு வந்திருக்கிறார் இந்த வீரமணி. சிறுமியர்களை சாந்திக்கு ஓகே செய்து தருவதை காங்கிரஸ் கட்சியின் மாநில அணிச்சார்பு நிர்வாகி ஒருவர் செய்திருக்கிறார்.
குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு உதவுவதுபோல ஒரு அமைப்பை நடத்தி, அதில் உதவி பெற வரும் ஏழை பெண் குழந்தைகளுக்கு ஆடம்பரப் பொருட்கள், பெரிய தொகை போன்றவற்றையெல்லாம் கண்ணில் காட்டி ஏமாற்றி வீரமணிக்கு இரையாக்கியுள்ளனர்.
சாந்தி வசித்த வீடு மட்டுமின்றி வீரமணியின் அடையார் வீடு, இ.சி.ஆர். கெஸ்ட் ஹவுஸ், ஆர்.கே.சாலையிலுள்ள ஆஃபிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறுமிகள் கொண்டுச்செல்லப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் வீரமணி தனக்காக மட்டுமின்றி, தன் தொழில் சார்ந்த நண்பர்கள், அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகள் என பலருக்கும் பல்வேறு ஆதாயங்களுக்காக சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை சப்ளை செய்ததாகவும் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக, சாந்தியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களில் சுமார் 12 சிறுமிகள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
தலைமுறைகளைக் கடந்த வக்கிர ஆட்டம்!
அதேபோல, வீரமணிக்கு சாந்தி அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில், 2003ல் ஒரு சிறுமி இறந்தது நியாபகம் இருக்கிறதா? எனக் கேட்டதும் பதிவாகியிருக்கிறது. அதேபோல, சாந்திக்கு 13, 14 வயது இருக்கும்போதிலிருந்தே வீரமணிக்கு அவர் நெருக்கம் எனவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, சாந்தியே பாதிக்கப்பட்டப் பெண்ணாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அப்படியானால் இந்த வக்கிரத்தை பல ஆண்டுகளாக வீரமணி செய்து வந்திருக்கிறாரா என சந்தேகிக்கும் போலீஸார், சாந்தியிடம் வீரமணி குறித்த ரகசியங்களை ஒவ்வொன்றாக கறக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
அதேபோல வீரமணி, தன்னை சிலர் எவ்வாறாக மிரட்டி பணம் பறித்தார்கள் என்ற விவரத்தையும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். இப்படியான சூழலில், வீரமணியால் முன்பு தாங்களும் பாதிக்கப்பட்டதாக சுமார் ஒன்பது பெண்கள் அடுத்தடுத்து புகார் அளித்ததால், விசாரணை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதற்கிடையே, இவ்வழக்கின் வீரியத்தை அறிந்த முதல்வர் விஜய், கமிஷனரை அழைத்து வழக்கின் அப்டேட்களை கேட்டதோடு, 'ஒருத்தரையும் விடாதீங்க!" என கண்டிப்புடன் உத்தரவிட்ட்டுள்ளார்.
வீரமணியை மிரட்டிய கதர்ப் புள்ளி?
இந்நிலையில், வீரமணியைப்போல சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமைகள் செய்தவர்கள், வீரமணியிடம் மிரட்டி பணம் பறித்தவர்கள், ஆதாயத்திற்காக அவரை காக்க முயன்றவர்கள் என வீரமணியிடம் பெற்ற தகவல்கள், அவரது தனிப்பட்ட டைரி ஆகியவற்றை வைத்து கமிஷனர் ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார். அதன்படி, வழக்கை விசாரிக்க பெண் ஐ.பி.எஸ் தலைமையில் ஒரு டீமும், குற்றவாளிகளைக் காப்பாற்றி பணம் பறித்தவர்கள் பற்றி விசாரிக்க ஆண் ஐ.பி.எஸ். தலைமையில் ஒரு டீமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இது ஒரு ஆர்கனைஸ்ட் க்ரைம் என்று தெரியவந்திருக்கிறது. வீரமணியிடம் பணம் கறக்க, சாந்தி தான் வீட்டில் கேமரா வைத்து பாலியல் வன்கொடுமைகளை ஷூட் செய்து மிரட்டியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. தவிர, வீரமணியால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தரப்பு, இதுபோன்ற விஷயங்களில் கில்லாடியான மேற்கண்ட கதர்க் கட்சி நிர்வாகி ஒருவரை அணுகி நீதி கேட்டுள்ளது. முன்னதாக சாந்தியையும் வீரமணி லெஃப்ட் ஹாண்டில் செய்திருக்கவே, சாந்தியும் கதர்ப் புள்ளியும் இணைந்து வீரமணியிடம் டீல் பேசியுள்ளனர்.
கொலைவரை நீண்ட ஸ்கெட்ச்!
விஷயம் பெரிதாவதை உணர்ந்த வீரமணி, தென் மாவட்ட தலித் தலைவர் ஒருவரிடம் அடைக்கலம் ஆகியிருக்கிறார். சாந்தி தரப்பிலிருந்து யாராவது வீரமணியை மிரட்டினால், அவர்களை இந்த தலைவர் ஹாண்டில் செய்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், கதர்ப் புள்ளிமீது கோபமடைந்த அந்த தலித் தலைவர், கதர்ப் புள்ளியை தீர்த்துக்கட்டவே துணிந்திருக்கிறார். இதை ஸ்மெல் செய்த உளவுத்துறை அப்போதைய ஆளும் வி.வி.ஐ.பி.யிடம் விஷயத்தை கொண்டுசேர்த்திருக்கிறது.
உடனே, தலித் தலைவரை லைனுக்கு வரவழைத்த மேலிட வி.வி.ஐ.பி, 'எது என்றாலும் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். சட்டம் ஒழுங்கு கெட்டால், நன்றாக இருக்காது என கண்டிப்புடன் பேசி கொலை ஸ்கெட்ச் விவகாரத்தை ஆஃப் செய்திருக்கிறார்.
இப்படியாக வீரமணி ஒத்துவராமல் தங்களை தீர்த்துக்கட்டவே அஸ்திரத்தை ஏவியதால், அவரை இனியும் விடக்கூடாது என முடிவெடுத்த சுதர்ப் புள்ளியும் சாந்தியும், குறிப்பிட்ட தன்னார்வலர் கவனத்திற்கு வீடியோ போகும்படி செயல்பட்டிருக்கின்றனர். அதன்படிதான் புகார் ஆகியிருக்கிறது. ஆனால், அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வீரமணியிடம் முன்னாள் மாநகர காக்கி அதிகாரி 50 ஸ்வீட் பாக்ஸ் வாங்கியிருக்கிறார். அதில் 10 ஸ்வீட் பாக்ஸ்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க உதவிய 'யாஸ்' பெண் காக்கி, சம்பந்தப்பட்ட லிமிட் ஏ.வி.எஸ். இன்ஸ்பெக்டர் மற்றும் ஏஜென்ட்கள் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொகையை கொடுப்பதற்காக, ஈ.சி.ஆரில் தன் பெயரில் இருந்த சுமார் 130 கோடியிலான சொத்தை வெறும் 80 கோடிக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி விற்றிருக்கிறார் வீரமணி. தொடர்ந்து, அதே பிப்ரவரி 9ம் தேதி விசாரணை முடிக்கப்படுவதாக காக்கிகள் தரப்பில் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தவிர, சுமார் 20 ஆயிரம் கோடி சாம்ராஜ்யம் கொண்டவரிடம் வெறும் 50 ஸ்வீட் பாக்ஸுகளோடு முக்கிய காக்கி அதிகாரி ஒதுங்கிக்கொள்ள காரணம், வீரமணிக்கு பெரிய அதிகார மையங்களின் ஆதரவு இருப்பதுதான்.ஆஸ்திரேலியா ஆயின்ட்மென்டும்... அதிகாரப் புள்ளிகளின் ஆதரவும்!
அதாவது, பல வருடங்களாக சிறுமியர்களிடம் வக்கிரத்தை வெளிப்படுத்தி வந்த வீரமணி, தனது 70வது வயது காலக்கட்டத்தில்தான் வெறிபிடித்த மிருகமாய் அதிகளவில் சிறுமிகளை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறார். இதற்காகவே, ஆஸ்திரேலியாவிலிருந்து பிரத்யேக கிரீம் ஒன்றை வரவழைத்து, வீரியத்துக்காக பயன்படுத்துவார் என சொல்லப்படுகிறது. அதுவும் புகாருக்கு காரணமான அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது என்கிறார்கள்.
இதுபற்றி அறிந்திருந்த 'நிலா' ஐ.ஏ.எஸ். மற்றும் 'குளிர் மாத' ஐ.ஏ.எஸ் உள்ளிட்டவர்கள் சிலரிடம் வீரமணி ஏதாவது தொழில்ரீதியான கோரிக்கை களுக்காக போகும்போது, அவர்களுக்கும் சப்ளை சர்வீஸ் நடந்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இடைப்பட்ட காலத்தில் 'நிலா' ஐ.ஏ.எஸ்ஸுடன் வீரமணிக்கு மனக்கசப்பாகியிருக்கிறது.
பிறகு கடந்த ஆட்சியில் முக்கிய அதிகார மையமாக அந்த ஐ.ஏ.எஸ். வந்தபிறகு மீண்டும் வீரமணியோடு ராசியாகி, பலதையும் சாதித்துக்கொண்டிருக்கிறார். தவிர, சுதர் வி.வி.ஐ.பி. ஒருவரும் வீரமணிக்கு அரணாக இருந்ததை அறிந்து அதிர்ச்சியாகி இருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
வீரமணிக்கு ஜெயிலில்தான் க்ளைமாக்ஸா?
விரைவில், இதில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளிகள் அனைவரும் ஒவ்வொருவராக விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள். கைதும் செய்யப்படலாம். அதேபோல, அண்ணா பல்கலைக்கழக வளாகப் பகுதியில் வீரமணிக்கு சொந்தமான பள்ளி இருப்பதாகவும், அதில் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது கடந்த ஆட்சியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்திலும் வீரமணிக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்வதென்றால், 'வீரமணியின் உயிருக்கு சிறையிலேயே ஆபத்து ஏற்படுமா அல்லது வாழ்நாள் சிறையா... எது க்ளைமாக்ஸ்?" என்பதெல்லாம் விரைவில் தெரிந்துவிடும் என சொல்லி முடித்தனர்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
(அ.கண்ணதாசன்)