தமிழுக்கான முன்னெடுப்புகள்
வரலாற்றில் பல சம்பவங்களின் தோற்றக் கதைகள் மீது நாம் கவனம் கொள்வதில்லை. அவற்றின் விளைவுகளை மட்டுமே சிலாகித்துக்கொண்டிருக்கிறோம். அப்படித் தமிழ்ச் சூழலில் நமக்கு அதிகம் தெரிந்திராத அல்லது நாம் கவனிக்கத் தவறிய சில நிகழ்வுகளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக, மாநிலத் தலைவராகத் தான் முன்னெடுத்த செயற்பாடுகளை நினைவுகூர்ந்திருக்கிறார் சிகரம் ச.செந்தில்நாதன்.
தலைப்புக்கேற்றவாறு மொழி சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் நடைபெற்ற போராட்டங்களே இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாகித்ய அகாதமியின் அமைப்புச் சிக்கல்கள் தொடங்கி, கீழ்வெண்மணி படுகொலை பற்றிய இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவல் மீதான மாற்றுப் பார்வை, தமிழைப் பயிற்று மொழியாக்கவும் ஆட்சி மொழியாக்கவும் நடத்தப்பட்ட மாநாடுகள், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திரைப்படங்கள் மீதான தணிக்கை, ராஜம் கிருஷ்ணன் நூல்கள் நாட்டுடைமையானது, இடதுசாரிகளின் கூட்டங்களில் பாரதிதாசன் படம் இடம்பெற்றது, கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கை என்பன உள்ளிட்ட தானும் தான் வழிநடத்திய இயக்கமும் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களைத் தக்க ஆவணங்களோடு பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
------------------------------------------------------------------
இலக்கியப் போராட்டங்கள்
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.220
தொடர்புக்கு: 98409 52919