📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 17, 2026 06:00 PM

‘தமிழ் மண்ணின் மகத்தான இசைக் கலைஞர் தேவா...’

‘தமிழ் மண்ணின் மகத்தான இசைக் கலைஞர் தேவா...’

தமிழ்த் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என்ற அடைமொழியோடு ரசிகர்களை தனது எளிய, துள்ளலான மெட்டுகளால் கட்டிப்போட்ட இசையமைப்பாளர் தேவா, இசைப் பிரியர்களையும் திரைத் துறையையும் கண்ணீரில் ஆழ்த்திவிட்டு இன்று (அக்.17) காலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி: அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர்.

‘அவ்வை சண்முகி’, ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’ படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.’

நடிகர் சரத்குமார்: ’இசை தென்றல் என போற்றப்படும் என் அன்புக்குரிய சகோதரர் தேவாவின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திறமையான இசையமைப்பாளரான அவரை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறேன். ‘சூரியன்’, ‘வேடன்’, ‘நம்ம அண்ணாச்சி’, ‘நட்புக்காக’ ஆகிய படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகளின் தருணங்களை ஒருபோதும் மறக்க முடியாது.

அவரது தனித்துவமான மற்றும் இன்னிசையால் ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவா. அவர் இன்று நம்மிடம் இல்லி என்றாலும் அவரின் இசை என்றென்றும் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்.’

டி.ராஜேந்தர்: ‘தமிழ்த் திரையுலகத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து, தன் தித்திக்கும் இசையால் திரை உலகத்தையே கட்டி ஆண்ட அந்த தேனிசை தென்றல் தேவா மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது. அந்த தேனிசைத் தென்றல் ஓய்ந்தது ஏன்? அந்த திரையுலகத்தின் இசைதூண் சாய்ந்தது ஏன்? தெரியவில்லை. நெஞ்சம் தாங்கவில்லை.

தமிழ் திரை உலகத்தின் சூப்பர் ஸ்டார் நம்முடைய ரஜினிகாந்த் தொடங்கி, உலக நாயகன் கமல்ஹாசன் என்று அத்தனை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் மட்டுமல்லாமல், எண்ணற்ற நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களை எல்லாம் ஜொலிக்க வைத்தவர். வெற்றி முத்திரையை பதித்து காட்டியவர்.

எந்த இயக்குநர் என்றாலும் அவர்களிடத்திலே எளிமையாக பழகக்கூடிய ஒரு இசையமைப்பாளராய், தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் இசையமைப்பாளராய், வாழ்ந்து காட்டியவர் தான் தேவா.

என் மகன் சிலம்பரசன் நடித்த 'தம்' திரைப்படத்தில் 'கலக்குவேன் கலக்குவேன்... கட்டம் கட்டி கலக்குவேன்'... என்று அத்தனை பாடல்கள் மூலம் கலக்கியவர், இன்றைக்கு கலங்க வைத்துவிட்டு சென்றுவிட்டாரே என்பதை நினைக்கும் போது நெஞ்சம் தாங்கவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்தினருக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கல்.’

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ‘தமிழ்த் திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த தேவாவின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.

என்னுடைய முதல் படமான ‘பாஞ்சாலங்குறிச்சி’யை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய தேவா மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக் கலைஞரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.’

நடிகர் விஜய் சேதுபதி: ‘தமிழ் திரையுலகின் இசை உலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது இசையும், பாடல்களும் என்றும் நம் நினைவுகளில் வாழும். ஆழ்ந்த இரங்கல்.’

நடிகை சிம்ரன்: ‘இந்த துயரமான செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பல தசாப்தங்களாக தேனிசை தென்றல் தேவாவின் இன்னிசை பாடல்கள் நமது வாழ்விலும், நினைவிலும் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. லடசக்கணக்கான மக்களின் மனங்களில் அவரின் பாடல்களுக்கு தனித்த இடம் உண்டு. காலத்தால் அழியாத அவரின் பாடல்களின் வழியாக அவரின் பாரம்பரியம் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.’

பாடகர் ஸ்ரீனிவாஸ்: ‘தேவா இனி நம்மிடம் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரின் இசை மேதமையையும் கடந்து, அவரது மனிதாபிமானம், அன்பான குணத்துக்காகவும் நான் அவரை பெரிதும் நேசிக்கிறேன். திரையுலகில் இப்படி ஒருவரை காண்பது மிகவும் அரிது. அவரை நேசிக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக அவரின் தனித்துவமான இசை, மனிதாபிமானம், நகைச்சுவை உணர்வுகளிம் மூலம் உங்களை நினைவில் வைத்திருப்போம். போய் வாருங்கள் அய்யா.’

ஆர்.ஜே.பாலஜி: ‘தமிழ் சினிமாவின் உண்மையான ஜாம்பவானும், தனது இசையால் பல தலைமுறைகளின் மனதை கவர்ந்தவருமான தேவாவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘மூக்குத்தி அம்மன்’ பட்த்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் கிடத்தது. அந்த நினைவுகள் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும். காலத்தால் அழியாத அவரது இசை மூலமாக அவர் புகழ் எப்போதும் நிலைத்திருக்கும். ஆழ்ந்த இரங்கல்.’

சிபி சத்யராஜ்: ‘தேவாவின் மறைவு செய்தி கேட்டு மிகவும், வேதனை அடைந்தேன். இசை என்று வரும்போது, பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு முழுமையான கலைஞர் அவர். 90-கள் மற்றும் 2000-களில் வந்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதற்கு அவரின் இசை காரணமாக இருந்திருக்கிறது.

மிகவும் அன்பான, அமைதியான பண்பாளர். இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமானவர். முன்னணி நடிகர்களுக்கு அவர் அமைத்துக் கொடுத்த மாஸ் பின்னணி இசை அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. சினிமா துறைக்கு இது பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.’

நடிகர் ராமராஜன்: ‘தேவா இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது. நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா.

அவரின் இசை மீதான பிடிப்பினாலும் அதில் ஆழ்ந்து கற்பிப்பினாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மிகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச் சிறந்த திறமைசாலி தேவா.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் "இயல் இசை நாடக மன்ற" தலைவராகவும், அதிமுக கொள்கை பாடல்களை உருவாக்கியும் அவர் மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.’

இசையமைப்பாளர் சாம் சிஎஸ்: ‘தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். காலத்தால் அழியாத உங்களின் இன்னிசையும், மறக்க முடியாத பாடல்களும் எங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும். உங்களின் அசாத்திய திறமையால் தமிழ் இசையை வளப்படுத்தியதற்கு நன்றி. அமைதியில் துயில் கொள்ளுங்கள் இசை மேதையே.’