தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவு: டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவு: டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இது குறித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங்களை சிறப்பித்த திரு.சாலமன் பாப்பையா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.