📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 06:03 AM

தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி

தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி

தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்: தஞ்சையில் 400 பேருக்கு இன்ப அதிர்ச்சி ஜோதி அறக்கட்டளையினர்

தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளையுடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்: தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்! சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தைக் காண இலவச டிக்கெட்டுகளை வழங்கி அசத்தி உள்ளனர் ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அபராதம் விதிப்பது மட்டுமின்றி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களைப் பாராட்டும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தைக் காண இலவச டிக்கெட்டுகளை வழங்கினர். மொத்தம் 100 பேருக்கு தலா நான்கு டிக்கெட்டுகள் வீதம், 400 பேருக்குத் திரைப்பட டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்தப் பரிசால் பயனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஹெல்மெட் அணிவது உயிரைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்துவதுடன், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்பவர்களைப் பாராட்டும் வகையிலும் இந்த முயற்சி அமைந்தது.

இதில் மற்றொரு சிறப்பம்சமாக, திரைப்பட டிக்கெட்டுகள் மட்டுமின்றி வாகன நிறுத்தக் கட்டணம், சிற்றுண்டிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளும் இலவசம் என அறிவிக்கப்பட்டது. “நீங்க வந்தா மட்டும் போதும்!” என்ற ரஜினி பாணியிலான அறிவிப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரசியத்தைச் சேர்த்தது.

இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அவரது திரைப்படத்துக்கும் விளம்பரம் தேவையில்லை. ஆனால், ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் பொதுமக்களின் நல்ல பழக்கத்துக்கு அங்கீகாரம் அளிப்பது அவசியம். சாலை விதிகளைப் பின்பற்றுபவர்களை ஊக்கப்படுத்தினால், மற்றவர்களும் அதைப் பின்பற்ற முன்வருவார்கள். அந்த நோக்கத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டோம்” என்றனர்.

பொதுவாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை மகிழ்ச்சியான அனுபவத்துடன் இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அபராதத்துக்குப் பயந்து ஹெல்மெட் அணிவதைவிட, உயிரின் மதிப்பை உணர்ந்து ஹெல்மெட் அணிவதே முக்கியம். அந்தப் பழக்கத்தை ஊக்குவிக்க, ‘தலைக்கு ஹெல்மெட்... தலைவர் படத்துக்கு டிக்கெட்!’ என்ற ஜோதி அறக்கட்டளையின் முயற்சி கவனம் பெற்றுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி