📅 Friday, 09 October 2026 IST | புரட்டாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 08, 2026 10:04 PM

திருவாரூரில் 10

திருவாரூரில் 10

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை திடீரென புகுந்த வெறிநாய்கள், வீதிகளில் சென்ற பொதுமக்களை ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை முதலே தெருநாய்கள் சில வெறிபிடித்தது போல் அலைந்துள்ளன. இதையடுத்து வீதியில் நடந்து சென்றவர்கள், சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்றவர்களை இந்த வெறிநாய்கள் திடீரென ஓட ஓட விரட்டி பாய்ந்து கடித்தன. நாய்களின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த கொடூரத் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அச்சம்- கோரிக்கை

ஒரே நாளில் அடுத்தடுத்து 10 பேரை வெறிநாய் கடித்த சம்பவத்தால் முத்துப்பேட்டை பகுதி மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.