📅 Sunday, 12 July 2026 IST | ஆனி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 12, 2026 03:34 AM

திமுகவினர் யாருக்கும் பயந்து ஓடி ஒளிபவர்கள் அல்ல: எகிறி அடித்த அனிதா ராதாகிருஷ்ணன்

திமுகவினர் யாருக்கும் பயந்து ஓடி ஒளிபவர்கள் அல்ல: எகிறி அடித்த அனிதா ராதாகிருஷ்ணன்

திமுகவினர் யாருக்கும் பயந்து ஓடி ஒளிபவர்கள் அல்ல: எகிறி அடித்த அனிதா ராதாகிருஷ்ணன்

முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். தனக்கு யாரோ எழுதி கொடுத்த வசனங்களை மேடைக்கு மேடை பேசுகிறார் என அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

Published : July 11, 2026 at 5:16 PM IST

திருநெல்வேலி: திமுகவினர் யாருக்கும் பயந்து ஓடி ஒளிபவர்கள் அல்ல என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "கரூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசும்போது எங்களுக்கு குதிரை பேரமோ, ஒட்டக பேரமோ நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியிருந்தார்.

முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு சினிமா நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை போல, தனக்கு எழுதி கொடுக்கப்பட்ட வசனங்களை மேடைக்கு மேடை பேசி வருகிறார்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை (வசனம்) வாசித்துவிட்டு, அடுத்த நிமிடமே அதை மறந்துவிடுகிறார். உடனே பக்கத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் பேப்பரை வாங்கி, அதையும் வாசித்து ஒரு கூட்டத்தை முடிக்கிறார். இதுதான் அவரது அரசியல் செயல்பாடு.

முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் மிகத் தெளிவாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான முடிவு மிக விரைவில் வரும்.

திமுகவினர் எதைக் கண்டும் பயந்து ஓடி ஒளிபவர்கள் அல்ல. ஆனால், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது, அவர்களுக்கு என்ன ஆனது என பார்க்காமல் யார் ஓடியது என்பதை அனைவருமே பார்த்தோம்.

மக்கள் பாதிக்கப்பட்டால் அந்த இடத்திற்கு நேரில் சென்று, மக்களுடன் மக்களாக நின்று களப்பணியில் ஈடுபடுபவர்கள்தான் திமுக காரர்கள்" என அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக, கடந்த ஜூன் 20ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா கிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்திருந்தார். மேலும், தனிப்பட்ட முறையிலும் முதலமைச்சர் விஜய்யை அவர் கிண்டல் செய்து விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.