தென்கொரியாவில் அதிகரிக்கும் தூக்கப் பிரச்சினை
சோல்: தென்கொரியாவில் தூக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 24 விழுக்காடுவரை அதிகரித்துள்ளதாக திங்கட்கிழமை (ஜூலை 13) வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் சுகாதாரக் காப்புறுதி மதிப்பீட்டுச் சேவை அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2021ல் ஆண்டில் 1.08 மில்லியனாக இருந்த தூக்கப் பிரச்சினை உள்ளோர் எண்ணிக்கை, 2025ல் 1.34 மில்லியனாக உயர்ந்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களே அதிக அளவில் (321,219 பேர்) பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், குழந்தைகள், பதின்ம வயதினரிடையே அப்பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடம் அப்பிரச்சினை 67.5 விழுக்காடு உயர்ந்து 3,726 ஆகப் பதிவாகியுள்ளது. 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறார்களிடையே அப்பாதிப்பு 32.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பிள்ளைகள் மீது திணிக்கப்படும் அதீத கல்வி அழுத்தமும் அதிகரித்துள்ள திரை நேரமுமே அவர்களிடம் இப்பிரச்சினை அதிகரித்துள்ளதற்கான முக்கியக் காரணங்கள் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகிலேயே மிகக் குறைந்த நேரம் தூங்கும் மக்களில் தென்கொரியர்களும் அடங்குவர். அந்நாட்டு மக்களின் சராசரி இரவுத் தூக்கம் 6 மணி நேரம் 58 நிமிடங்களாக உள்ளது. இது பொருளியல் பங்காளித்துவம், மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் சராசரி தூக்க நேரமான 8 மணி நேரம் 22 நிமிடங்களை விட 18 விழுக்காடு குறைவாகும்.
24 மணி நேரக் கடைகள், இரவு நேர விநியோகச் சேவை உள்ளிட்ட 24 மணி நேர சேவை போன்றவற்றின் அதிகரிப்பும் இப்பிரச்சினை அதிகரிப்பதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டது. கொரிய ஊழியர் கழக தரவுகளின்படி, 2024ல் 2.17 மில்லியன் பேர் இரவு 10 முதல் காலை 6 மணிவரையிலான இரவு நேர லேலை பார்த்தனர். இது, அந்நாட்டின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 14.2 விழுக்காடாகும்.
நாட்பட்ட தூக்கமின்மை, மூச்சுத்திணறல் போன்ற தூக்கப் பிரச்சினைகள் தென்கொரியாவில் பெரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.