தேனிசை தென்றல் தேவாவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது: இபிஎஸ், பிரேமலதா நேரில் அஞ்சலி
தேனிசை தென்றல் தேவாவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது: இபிஎஸ், பிரேமலதா நேரில் அஞ்சலி
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Published : October 18, 2026 at 1:08 PM IST
சென்னை: தேனிசை தென்றல் தேவா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை சொந்த ஊரான ஆற்காட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
'தேனிசை தென்றல்' என அனைவராலும் அறியப்பட்ட இசையமைப்பாளர் தேவா நேற்று (அக்டோபர் 17) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ஆற்காட்டிற்கு இன்று மதியம் 12 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி சடங்கானது அவரது சொந்த ஊரான ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் நடைபெறும் என தேவாவின் மகனும், இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, சிவக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று காலை தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “இசையமைப்பாளர் தேவாவின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் தேவா. பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசியபோது, “தேவா இன்று நம்முடன் இல்லை. தென் மாவட்டங்கள் முழுவதும் தேவாவின் ‘வாராரு வாராரு’ பாடல் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இது தேவாவிற்கும், விஜயகாந்திற்கு இடையே உள்ள பந்தத்தை வெளிப்படுத்துகிறது.
விஜயகாந்தும், தேவாவும் சொர்க்கத்தில் சந்தித்துக் கொள்வார்கள். தேவாவின் மரணம் அவருடைய குடும்பத்தினர் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. நல்லவர்களைதான் கடவுள் சீக்கிரம் கொண்டு செல்கிறார்” என்றுத் தெரிவித்தார்.
இதனிடையே, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் படக்குழுவினர், மறைந்த தேனிசை தென்றல் தேவாவின் உருவப்படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏற்றி, மரியாதை செலுத்தினர்.