தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் 89,955 மோதிரங்கள் தயார் ஜோய்ஆலுக்காஸ் பெருமிதம்
சென்னை: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு, முதல் கட்டமாக 89,955 மோதிரங்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, ஜோய்ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்திற்கான டெண்டரில், தங்கம் விலையை தவிர்த்து, மோதிரங்கள் செய்கூலி, பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரை, காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து, வெறும் ஒரு பைசாவை மட்டுமே கட்டணமாக, ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இதனால், எல் - 1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், முதற்கட்ட தங்க மோதிரங்களை தயாரித்து வழங்கி இருப்பதாக, ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜோய்ஆலுக்காஸ் குழும தலைவர் ஜோய்ஆலுக்காஸ் கூறியதாவது:
முதற்கட்டமாக, 89,955 தங்க மோதிரங்கள் தயாரிக்கப்பட்டு, அதிக பிரசவங்கள் நடக்கும், 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த மோதிரங்கள் அனைத்தும், அரசு பரிந்துரைத்த ஒரு கிராம் எடை, 22 காரட் துாய்மைத்தரத்தின்படி, துல்லியமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மோதிரத்திலும், பி.ஐ.எஸ்., ஹால் மார்க் முத்திரையும், 6 இலக்க எச்.யு.ஐ.டி., எண்ணும் முத்திரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் பிரத்யேக மையங்களில் மோதிரங்கள் பேக்கிங் செய்யப்பட்டு, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த உன்ன தமான திட்டத்தின் வழியே, தமிழக மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.