டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்
சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானாவில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்கு ரூ.27.30 லட்சம், சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்கு ரூ.18.60 லட்சம் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த டெண்டர்கள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி முதல்வர், தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது.
மேலும் இரு டெண்டர்களும் இணையதளத்தில் ‘திறக்கப்பட வேண்டியது’ என்ற நிலையில் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த டெண்டர் விவகாரம் சர்ச்சையான நிலையில், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யாவுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.