📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 17, 2026 04:02 PM

SIR vs SSR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய விதிகள் மற்றும் காலக்கெடு

SIR vs SSR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய விதிகள் மற்றும் காலக்கெடு

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கள்ள ஓட்டுகளை தவிர்க்க சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (Special Intensive Revision) மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணியின் முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி தன்னிச்சையாக செயல்பட்டதாக சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது.

SIR பணியில் தகுதி இருந்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து மீண்டும் சேர்க்க தற்போது சிறப்புத் திருத்தப் பணிகளை (Special Summary Revision) மேற்கொண்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இதன்படி தகுதி இருந்தும் நீக்கப்பட்டவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்தப் பணியின் போது வாக்காளர் அட்டையில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான வாக்காளர்களை சேர்க்க புதிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன

வருகின்ற நவம்பர் 12-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானதும், அன்றைய தினத்தில் இருந்து (நவம்பர் 12) - டிசம்பர் 11-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்த பிறகு, 2027 ஜனவரி 4-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

SSR புதிய விதிமுறைகள்:

* ஒரு தொகுதியில் 2%-கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டால், வாக்குப்பதிவு அதிகாரி அத்தொகுதியில் நேரில் சரிபார்க்க வேண்டும்.

* 5-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க ஒருவர் விண்ணப்பித்தால், அதன் உண்மைத் தன்மையை தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

* வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணத்தை தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிகாரிகள் குறிப்பிட வேண்டும்.

* தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஒரு நாளைக்கு 10 படிவங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை உயரும் பட்சத்தில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

* ஒருவர் மொத்தமாக பலருடைய பெயர்களை நீக்கக் கோரி விண்ணப்பிப்பதைத் தடுக்க, தனிநபர்கள் சமர்ப்பிக்கும் படிவம்-7-ன் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

SIR vs SSR வேறுபாடு:

* SIR பணியில் ஒரு வாக்காளர் பெற்றோரின் பெயரை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலுடன் சரிபார்த்து சான்றளிக்க வேண்டும். ஆனால் SSR பணியில் விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம்-6 மட்டுமே போதுமானது.

* SIR பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, வாக்காளர்களை உறுதிப்படுத்தினர். ஆனால் SSR-ல் படிவங்கள் வழியாகவே வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

* உயிரிழந்தவர்கள், இரட்டைப் பதிவு மற்றும் இடம் பெயர்ந்தோரின் பெயர்கள் SIR பணியில் நீக்கப்பட்டன. SSR-ல் தகுதியிருந்தும் நீக்கப்பட்ட வாக்களார்களுக்கு மீண்டும் இணைய ஒரு நல்வாய்ப்பு கிடைக்கும்.

வாக்காளர்கள் செய்ய வேண்டியவை:

* முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (voters.eci.gov.in) அல்லது ECI Voters Helpline செயலியில் உங்கள் பெயர் இருக்திறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

* பெயரை இணைக்க படிவம்-6, தகுதியற்ற பெயர்களை நீக்க படிவம் 7 மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய தினங்கள்:

* 2026 நவம்பர் 12 - வரைவுவாக்காளர் பட்டியல் வெளீயீடு

2026 நவம்பர் 12 - டிசம்பர் 11 - பெயர் சேர்க்க / நீக்க மற்றும் திருத்தம் செய்யலாம்.

* 2027 ஜனவரி 4 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு