Sardar 2 Review: சர்தார் 2 விமர்சனம்.. ஆன்டிபயோடிக்ஸ் அப்போகலிப்ஸ் வெடித்ததா?.. சுவாரஸ்யம்?
சென்னை: இயக்குநர் பி.எஸ். மித்ரன் தொடர்ந்து ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் தமிழில் படங்களை இயக்கி வருகிறார். ஆனால், அது எந்தளவுக்கு ரசிகர்களை கவர்கிறது என்பதில் தான் பெரிய சிக்கலே உள்ளது. மிஷன் இம்பாசிபிள், ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் என ஏகப்பட்ட படங்களை பார்த்த தாக்கத்தை மட்டுமே சர்தார் 2 கொடுக்கிறது. ஆனாலும், படத்தில் முக்கியமாக இருக்க வேண்டிய சுவாரஸ்யம் சுத்தமாக மிஸ்ஸிங்.
பெரிய பட்ஜெட்டில் மைசூர் தசரா விழா எல்லாம் கிளைமேக்ஸில் கொண்டு வந்து பிரம்மாண்டத்தை காட்டினாலும் வீக்கான வில்லனாக படம் முழுக்க பிளாக் டேகர் எனும் பில்டப் உடன் வரும் எஸ்.ஜே. சூர்யா படத்துக்கு பலமாக இல்லாமல் பெரும் பலவீனமாகவே மாறிவிட்டது தான் சர்தார் 2 படத்தின் சுவாரஸ்யத்தை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விடுகிறது.
சர்தார் 2 திரைப்படம் டாக்ஸிக் படத்தை போல தலைவலியை கொடுக்கிற படமா என்றால் நிச்சயம் கிடையாது. மாற்றான் படத்தை போல நல்ல கன்டென்ட் இருந்தும் சொதப்பியதை போலவே சொதப்பி விடுவது தான் கஷ்டமாக உள்ளது. சர்தார் 2 படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
சர்தார் 2 கதை: சர்தார் படத்தில் தண்ணீர் பிரச்னையை மூலக் கதையாக கொண்டு ஒரு கமர்ஷியல் ஸ்பை த்ரில்லர் படத்தைக் கொடுத்த பி.எஸ். மித்ரன் இந்த 2வது பாகத்தில் ஆண்டிபயோடிக்ஸ் அப்போகலிப்ஸ் என்கிற விஷயத்தை ஆழமாக விதைக்க முயன்றுள்ளார். உயிர் காக்கும் ஆன்டி பயோடிக்ஸ் மருந்தை தினமும் டிஃபன் போல சாப்பிட்டால், அது மருந்தாக பலனளிக்காது என்கிற கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதை தான் இந்த சர்தார் 2.
படமாக பார்த்தால் சர்தார் என அழைக்கப்படும் அப்பா போஸ் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் விஜய் பிரகாஷ் (கார்த்தி) டம்மி போஸ்ட்டிங்கில் இருந்து வரும் நிலையில், எப்படியாவது பெரிய கேஸை பிடித்து Raw-ன் மெயின் டீமுக்குச் செல்ல துடிக்கிறார்.
சர்தார் நடத்திய ஒரு மிஷினில் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் பயோ வார் வெப்பனை தடுத்து நிறுத்திய நிலையில், அதனை மீண்டும் ஆக்டிவேட் செய்து ஒட்டுமொத்த மக்களையும் கொல்லத்துடிக்கும் பிளாக் டேகர் என அழைக்கப்படும் யோகி (எஸ்.ஜே. சூர்யா) அந்த வெப்பனை ஆன் செய்ய உதவும் 3 கத்திகளை தேடி கண்டுபிடிக்க வருகிறார்.
சர்தார் போலவே சீக்ரெட் ஏஜென்ட்டாக இருந்தவர்கள் சீக்ரெட் பேஸில் வைத்துள்ள அந்த வெப்பன்ஸை வில்லன் எடுத்தாரா? பயோ வாரை மீண்டும் ஆரம்பித்தாரா? சர்தார் மற்றும் விஜி இருவரும் இணைந்து அந்த சதியை முறியடித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த சர்தார் 2 படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: கிட்டத்தட்ட டாம் க்ரூஸ் நடிப்பில் கடைசியாக வந்த மிஷன் இம்பாசிபிள் படத்தின் கதை போலத்தான் இந்த படமும் அதிலும், சாவியை வைத்து ஏஐ மெஷினை ஆக்டிவேட் செய்ய போராடுவார்கள். அதை தடுக்க ஹீரோ முயற்சிப்பார். ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் படத்தில் வருவது போல பயோ வாரை ஆரம்பித்து மக்களை கொல்ல துடிக்கும் வில்லனும் ரகசிய குறியீடுகள் மூலம் அதை காப்பாற்ற போராடும் ஹீரோ போலத்தான் கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.
எங்கேயும் கதை நிற்காமல் 3 மணி நேரம் சும்மா ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏகப்பட்ட மிஷன், சர்தார் கடந்த காலத்தில் ஜப்பானில் நடத்திய மிஷன், அதற்கான காரணம் உள்ளிட்டவை கொஞ்சம் கனெக்ட்டாகவும் சுவாரச்யமாகவும் உள்ளது.
ஆனால், வில்லன் போர்ஷனும் அவர் கொடுக்கும் அந்த ஆன்டி பயோடிக் அப்போகலிப்ஸ் லெக்சரும் இன்னமும் நேர்த்தியாக ஸ்க்ரீன் பிளே செய்து பார்க்கும் ரசிகர்களை அச்சப்பட வைக்கும் அளவுக்கு சொல்லாமல், யோகி பாபுவையும் நிழல்கள் ரவியையும் வைத்துக் கொண்டு விடுகதை சொல்வதெல்லாம் யார் கொடுத்த ஐடியா என்றே தெரியவில்லை.
பிளஸ்: கார்த்தி தான் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடித்து நடித்துள்ளார். டபுள் ஆக்ஷனில் கம்பீரமாகவும் ஆக்ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்தும் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் ஸ்மார்ட்டான வில்லனாக அதிரடி என்ட்ரி கொடுக்கிறார். ஆட விட்டு அடிக்கும் சில இடங்கள் அவரது நடிப்புத் திறமை பலமாக வெளிப்படுகிறது. கார்த்திக்கு அடுத்து படத்தில் நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பு பெரிய பலமாக உள்ளது. அதிலும், அந்த ஃபிளாஷ் பேக் போர்ஷனில் எல்லாம் பக்காவாக நடித்துள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, சாம் சிஎஸ் இசை படத்திற்கு பலம்.
மைனஸ்: இயக்குநர் பி.எஸ். மித்ரன் பிரம்மாண்டமாக ஒரு விஷயத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தது நல்ல விஷயம் தான். ஆனால், வீக்கான ரைட்டிங் மூலம் ஸ்க்ரீன் பிளேவில் பல இடங்களில் கோட்டை விட்டு, நிறுத்தி நிதானமாக சொல்ல வேண்டிய விஷயங்களை மேம்போக்காக ஓடுகிற வேகத்தில் சொல்லிக் கொண்டே போவது படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. இந்த கதைக்கு இன்னமும் பெட்டரான ஸ்க்ரீன் பிளே வைத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஹாலிவுட் பட பாணியில் ஸ்க்ரீன்பிளே வைத்தது தான் பலவீனமாக மாறியுள்ளது.
குறைகள் இருந்தாலும், இந்த சர்தார் 2 திரைப்படம் போரடிக்காமல், தேவையில்லாத காட்சிகளுடன் கடுப்பேற்றாமல், எடுத்துக் கொண்ட மிஷனை கச்சிதமாகவே முடித்துள்ளது பெரிய ஆறுதலை தருகிறது.