📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 06, 2026 09:00 AM

சஞ்சு சாம்சனை நீக்கியதில் தப்பே இல்லை.. வைபவ் சூர்யவன்ஷியால் அம்பலமான கசப்பான புள்ளிவிவரம்

சஞ்சு சாம்சனை நீக்கியதில் தப்பே இல்லை.. வைபவ் சூர்யவன்ஷியால் அம்பலமான கசப்பான புள்ளிவிவரம்

சஞ்சு சாம்சனை நீக்கியதில் தப்பே இல்லை.. வைபவ் சூர்யவன்ஷியால் அம்பலமான கசப்பான புள்ளிவிவரம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்ட முடிவு, இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு பழைய கேள்வியைக் கிளப்பியுள்ளது. "ஏன் எப்போதும் சஞ்சு சாம்சன் முதலில் நீக்கப்படுகிறார்?" என்ற ஆதங்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம், அவரது புள்ளிவிவரங்கள் ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்துகின்றன.

சஞ்சு சாம்சன் ஒரு சாதாரண வீரர் அல்ல; அவரது புள்ளிவிவரங்களே அதற்குச் சான்று. 57 இன்னிங்ஸ்களில் 1405 ரன்கள், 155.42 ஸ்டிரைக் ரேட், 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் என அவரது பட்டியல் நீள்கிறது. ஆனால், இவற்றுடன் அவரது சராசரி 27.02 மற்றும் 8 டக்-அவுட்களும் அடங்கும். அவரது ஒட்டுமொத்த ரன்களில் 56.4 சதவீதம் (793 ரன்கள்) வெறும் 9 இன்னிங்ஸ்களில் இருந்து மட்டுமே வந்துள்ளன. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமுள்ள 48 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 13.6 ரன்கள் மட்டுமே.

அவரது 3 சதங்கள் (111, 107, 109 நாட் அவுட்) அவரது ஒட்டுமொத்த ரன்களில் கால் பங்கை வகிக்கின்றன. இந்த 3 சதங்கள் இல்லாமல் போனால் அவரது சராசரி 21.5 ஆகக் குறைந்துவிடும். சாம்சன் ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினால், அதற்கு அடுத்த சில போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் 97 நாட் அவுட், 89 மற்றும் 89 எனத் தொடர்ச்சியாக விளையாடி நம்பிக்கையளித்த சாம்சன், அதன் பிறகு விளையாடிய போட்டிகளில் 5, 0, 1 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றினார். இந்த திடீர் வீழ்ச்சியே அவரது இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தொடக்க வீரராக 31 இன்னிங்ஸ்களில் 179 ஸ்டிரைக் ரேட்டுடன் 932 ரன்கள் குவித்திருந்தாலும், அதில் 18 இன்னிங்ஸ்களில் 20 ரன்களைக் கூட அவர் தாண்டவில்லை. இப்படி தொடர்ச்சியாக ரன் குவிக்காமல் இருப்பதே அவரது பலவீனமாக மாறியுள்ளது. இந்த முறை சஞ்சு சாம்சனுக்குப் பின்னால் காத்திருந்தது ஒரு சாதாரண மாற்று வீரர் அல்ல; இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி. தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு திறமைசாலி வெளியே காத்திருக்கும் போது, சஞ்சு சாம்சனைத் தொடர்ந்து ஆதரிப்பது தேர்வுக்குழுவுக்குக் கடினமாகிவிட்டது.

சஞ்சு சாம்சனின் திறமை மீது யாருக்கும் சந்தேகம் இல்லை. அவரது அசாத்தியமான ஷாட்களும், அதிரடியும் இந்தியாவிற்குப் பலமுறை வெற்றியைத் தேடித்தந்துள்ளன. ஆனால், அந்த ஆட்டம் எப்போது மீண்டும் வெளிப்படும் என்ற நம்பகத்தன்மை இல்லாததே அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய சோகமாகும்.