📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 03, 2026 04:04 PM

ரொம்ப நாள் கழித்து செம இந்தியா

ரொம்ப நாள் கழித்து செம இந்தியா

ரொம்ப நாள் கழித்து செம இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்.. கடைசி 5 ஓவரில் நிகழ்ந்த அனல் பறக்கும் த்ரில்லர்

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆண்கள் கிரிக்கெட்டின் தங்கப் பதக்க இறுதிப்போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடைசி ஓவர் வரை அனல் பறந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியாக இது அமைந்தது.

212 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணிக்கு ஹசன் நவாஸ் 96 ரன்கள் குவித்து அபார ஆட்டம் ஆடி கடைசி வரை கடும் அச்சுறுத்தல் கொடுத்தார். இந்திய அணி 211 ரன்கள் எடுத்ததால் எளிதாக வெற்றி பெறும் என்ற எண்ணம் இருந்தது. அதே போல, பாகிஸ்தான் அணி முதல் பாதியில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஆனால், ஹசன் நவாஸ், அயூப் இணைந்து ஆட்டத்தை கடைசி வரை பரபரப்பாக எடுத்துச் சென்றனர். கடைசி 5 ஓவர்களில் 82 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நிகழ்ந்தவற்றை காணலாம்.

16வது ஓவர் (ரவி பிஷ்னோய் - 14 ரன்கள்): பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 82 ரன்கள் தேவைப்பட்டது. பிஷ்னோய் வீசிய இந்த ஓவரில் ஹசன் நவாஸ் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். 14 ரன்கள் கசிய, பாகிஸ்தானின் ஸ்கோர் 144/4 என உயர்ந்தது. வெற்றிக்கு கடைசி 24 பந்துகளில் 68 ரன்கள் தேவைப்பட்டது.

17வது ஓவர் (சிவம் துபே - 16 ரன்கள்): துபே வீசிய இந்த ஓவரில் பாகிஸ்தான் பேட்டர்கள் ஆக்ரோஷத்தை கூட்டினர். வாஷிங்டன் சுந்தரின் மிஸ்பீல்டிங் மூலம் ஒரு பவுண்டரியும், அப்துல் சமத் ஒரு பவுண்டரியும் அடிக்க 16 ரன்கள் குவிந்தது. பாகிஸ்தான் 160/4 என மிரட்டியது. 18 பந்துகளில் 52 ரன்கள் என்ற நிலைக்கு ஆட்டம் நகர்ந்தது.

18வது ஓவர் (வாஷிங்டன் சுந்தர் - 1 விக்கெட் & 8 ரன்கள்): நெருக்கடியான இந்த ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர், 3வது பந்தில் அப்துல் சமதை (9) திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். கடைசி பந்தில் சாத் மசூத் ஒரு சிக்சர் அடித்தாலும், இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியா ஆட்டத்தை தன் பக்கம் திருப்பியது. பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது.

19வது ஓவர் (ஜஸ்பிரித் பும்ரா - 11 ரன்கள்): 19வது ஓவரை வீசிய உலகின் நம்பர் ஜஸ்பிரித் பும்ரா, துல்லியமான யார்க்கர்களால் ஹசன் நவாஸை திணறடித்தார். மசூத் ஒரு சிக்சர் அடித்தாலும், பும்ரா தனது அனுபவத்தால் கடைசி 2 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தினார். பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டது.

20வது ஓவர் (சிவம் துபே -13 ரன்கள்): கடைசி ஓவரை வீசிய சிவம் துபேவின் முதல் பந்தில் நவாஸ் பவுண்டரியும், 4வது பந்தில் ஒரு பிரம்மாண்ட சிக்சரும் அடித்தார். பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும், ஹசன் நவாஸுக்கு சதம் அடிக்க 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி பந்தில் (19.6) துபே வீசிய ஸ்லோவர் பவுன்சரில் நவாஸ் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார். 51 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில் நவாஸ் சதம் தவறவிட்டு வெளியேறினார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து 2வது முறையாக வரலாற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. சர்வதேச டி20 அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.