புக்கிட் பாத்தோக் காப்பிக் கடையில் தீ; 30 பேர் வெளியேற்றம்
புக்கிட் பாத்தோக்கில் உள்ள காப்பிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு 30 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 413, புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யு 4ல் தீ விபத்து குறித்து அதிகாலை 3.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.
அந்த இடத்தின் கீழ்த்தளத்தில் இயங்கிய காப்பிக் கடையில் உள்ள மூன்று உணவுக் கடைகளில் தீ ஏற்பட்டதாகவும் எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.
பாதுகாப்பு கருதி அந்தக் கட்டடத்தில் இருந்த 30 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதையும் அது குறிப்பிட்டது.
வலுக்கட்டாயமாகக் காப்பிக் கடைக்குள் நுழைந்து இரண்டு குழாய்களில் நீரைப் பீய்ச்சியடித்துத் தீயை அணைத்ததாகவும் எஸ்சிடிஎஃப் விளக்கியது. அங்கிருந்து வெளியேற்றப்பட்டோரில் ஒருவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து அறிய விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஹொங் கா நார்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஹொங் சுவாங் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள வீடுகளுக்கு பெருமளவு சேதம் ஏற்படவில்லை என்று அவரது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இருப்பினும் ஒரு இரண்டாம் மாடி வீட்டின் தரை சற்று வெப்பமாக இருந்ததை அவர் உணர்ந்தார். குழந்தைகளின் தோல் மிருதுவானதால் அங்கிருந்த குடும்பத்திடம் கவனமாக இருக்கும்படியும் அவர்களை அப்பகுதியைத் தவிர்க்கும்படி அறிவுரை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
காப்பிக் கடையில் ஏற்பட்டுள்ள சேதத்தைவிட அங்கு வணிகம் செய்வோரின் நிலையை நாம் நினைவில்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டில் காப்பிக்கடைகளில் ஏற்பட்ட தீச்சம்பவங்களில் இது மூன்றாவதாகும். ஏற்கெனவே மே மாதத்தில் ஹவ்காங்கில் ஒரு விபத்தும், மார்ச் மாதத்தில் வாட்டர்லூ ஸ்திரீட்டில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்தின் அருகில் உள்ள காப்பிக் கடையில் தீ விபத்தும் ஏற்பட்டன.