பிரித்வி ஷா காதலில் விரிசல்.. பாதியில் நின்றுவிடுமா திருமணம்.. வருங்கால மனைவி போட்ட பரபரப்பு போஸ்ட்
பிரித்வி ஷா காதலில் விரிசல்.. பாதியில் நின்றுவிடுமா திருமணம்.. வருங்கால மனைவி போட்ட பரபரப்பு போஸ்ட்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் வருங்கால மனைவி ஆகிருதி, தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஒரு பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடக பிரபலமும், நடிகையுமான ஆகிருதிக்கும், பிருத்வி ஷாவுக்கும் கடந்த 2026 மார்ச் 8 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சமீபத்தில் ஆகிருதி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் பலமுறை ஏமாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி வரும் அனைத்து வதந்திகளும் செய்திகளும் உண்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தப் பதிவில் அவர் பிருத்வி ஷாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.
"நான் பலமுறை ஏமாற்றப்பட்டேன், இருந்தாலும் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் சென்ற பிறகும் இப்படி நடக்கும் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை... எல்லாமே உண்மைதான், எல்லா வதந்திகளும் உண்மைதான். அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் நீங்கள் பார்ப்பவை அனைத்தும் உண்மை," என்று அவர் எழுதியுள்ளார். தற்போது இந்த ஸ்டோரி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், எக்ஸ் (X) தளத்தில் பயனர்கள் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, பிருத்வி ஷா தனது நிச்சயதார்த்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "மைதானத்தில் சிக்ஸர்கள் அடிப்பதில் இருந்து, அதற்கு வெளியே வாழ்நாள் முழுமைக்குமான சிறந்த இன்னிங்ஸ் வரை. அவர்தான் எனது வாழ்வின் மிகச் சரியான இன்னிங்ஸ்! என்று பதிவிட்டிருந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்து சுமார் நான்கு மாதங்களே ஆகியுள்ள நிலையில், ஆகிருதியின் இந்த புதிய பதிவு இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை பிருத்வி ஷாவுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையவில்லை. 2025 ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகாமல் போன அவர், 2026 சீசனில் மீண்டும் ஐபிஎல் தொடருக்குத் திரும்பினார். அவரது முன்னாள் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அவரை ₹75 லட்சத்திற்கு வாங்கியது. இருப்பினும், இந்த சீசன் முழுவதும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு பெறாமல் அணியின் பெஞ்சில் மட்டுமே அமர வைக்கப்பட்டார்.
டெல்லி அணி தொடக்க ஆட்டக்காரர்களுக்கான சரியான கூட்டணியைக் கண்டறிய தடுமாறியபோதும், பதும் நிஸங்க மற்றும் சாஹில் பராக் போன்ற இளம் வீரர்களுக்கு அறிமுக வாய்ப்புகளை வழங்கியதே தவிர, பிருத்வி ஷாவை ஆட வைக்க முன்வரவில்லை.
பிருத்வி ஷா தனது ஐபிஎல் பயணத்தை 2018 இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் ₹1.2 கோடிக்கு ஒப்பந்தமாகி தொடங்கினார். 2021 சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 479 ரன்கள் எடுத்ததே (சராசரி 31.93, ஸ்டிரைக் ரேட் 159.13) அவரது சிறந்த செயல்பாடாக உள்ளது. அதன் பின்னர் 2022 முதல் 2024 வரையிலான மூன்று சீசன்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2025 ஏலத்திற்கு முன்னதாக டெல்லி அணி அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.