பர்ச் ரோடு தீபாவளிச் சந்தை திறப்பு; வாடிக்கையாளர்களின் வருகை மெல்ல அதிகரிப்பு, சிங்கப்பூர் செய்திகள்
சிராங்கூன் ரோட்டில் உள்ள முக்கியமான தீபாவளிச் சந்தைகளில் ஒன்றான பர்ச் ரோடு சந்தை, சனிக்கிழமை (அக்டோபர் 10) இயங்கத் தொடங்கியது.
சனிக்கிழமை பிற்பகலில் பெய்த மழை, மோசமடைந்த புகைமூட்டத்தைச் சற்றுத் தணித்திருந்த நிலையில், பிற்பகலிலிருந்து மக்கள் கூட்டம் மெல்லப் பெருகத் தொடங்கியது.
சந்தையின் முன்புறத்தில் மின்னும் விளக்குகள், பொரித்த உணவு, பலகாரங்களின் நறுமணம், தோரணங்கள், வண்ண ஆடைகள், கண்களுக்கு வழங்கிய வண்ண விருந்து போன்றவை தீபாவளிக் களையைக் கூட்டின.
நவம்பர் 7ஆம் தேதி வரை இயங்கும் இச்சந்தையில், தங்களுக்குப் பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களை வரவேற்கத் தயாராக இருப்பதாகத் தமிழ் முரசிடம் பேசிய கடைக்காரர்கள் சிலர் கூறினர்.
‘எஸ்கே டிரேடர்ஸ்’ (SK Traders) என்ற வணிகப் பெயரில் சந்தையில் இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள அதன் உரிமையாளர் திருமதி மாரிமுத்து கலையரசி, பல்லாண்டுகளாகத் தம்மை நாடிவரும் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆவலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“காலப்போக்கில் வாடகையும் கடைக்கான டெண்டர் தொகையும் உயர்ந்திருப்பது உண்மைதான். வியாபாரச் செலவுகள் அதிகரித்தாலும், எங்களை நாடிவரும் மக்களுக்குத் தொடர்ந்து நியாயமான விலையிலேயே பொருள்களை வழங்கவே முயல்கிறோம்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பர்ச் ரோடு சந்தையில் கடை நடத்திவரும் ‘டிசைனர் கலெக்ஷன்’ (Designer Collection) ஆடைக் கடையின் ஊழியர் திருமதி சரஸ், “இங்குள்ள தையல்காரர்களைக் கொண்டு சிறப்பாகத் தைக்கப்படும் ‘ரெடிமேட்’ புடவைகளுக்கே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, தற்போது கடைகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளதுபோலத் தெரிந்தாலும், இன்னும் இரண்டு மூன்று நாள்களில் முழுமையாகக் கடைகள் அமைக்கப்பட்டவுடன் சந்தை களைகட்டிவிடும் என்று நம்புவதாக வாடிக்கையாளர் திருமதி மதியழகி தெரிவித்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“எனக்கு இங்கு மலிவான விலையில் கிடைக்கும் ஆடைகள் மிகவும் பிடிக்கும். ஐந்து வெள்ளிக்கெல்லாம் மேலாடைகள் மிகவும் நன்றாகக் கிடைக்கும். அதேபோல் பண்டிகை நெருங்கும் வாரங்களில் 10 வெள்ளிக்கு இரண்டு சுடிதார்கள் எனச் சிறப்புத் தள்ளுபடி விலையிலும் விற்பார்கள்,” என்று திருவாட்டி மதியழகி, 37, கூறினார்.
முன்பு தெரு முழுவதும் கடைகள் நிரம்பி வழியும் எனக் குறிப்பிட்ட 59 வயது வாடிக்கையாளர் திரு ராமதாஸ், தற்போது கடைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். தீபாவளிப் பொருள்களோடு சம்பந்தப்படாத பொருள்களுக்கான கடைகள் அதிகரித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
“ஆனாலும் எங்களுக்குத் தெரிந்த கடைக்காரர்களைக் காண வந்து, அவர்களிடமிருந்து பொருள்களை வாங்குகிறோம். காரணம், தீபாவளிச் சந்தை இனி தொடருமா இல்லையா என்பது நாம் தரும் ஆதரவில்தான் உள்ளது. தொடர்ந்து ஆதரவு கொடுக்க நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.