📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 01:04 PM

போரூர் அருகே அரசு பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் தாக்கியதாக பரபரப்பு!

போரூர் அருகே அரசு பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் தாக்கியதாக பரபரப்பு!

போரூர் அருகே அரசு பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் தாக்கியதாக பரபரப்பு!

சென்னை: சென்னை போரூர் சிக்னல் அருகே அரசு மாநகரப் பேருந்தில் படிக்கட்டில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்ததை கண்டித்த நடத்துநரை, பள்ளி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐயப்பன்தாங்கலில் இருந்து வடபழனி நோக்கி தடம் எண் 26 அரசு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. போரூர் அருகே சென்றபோது, பள்ளிக்குச் செல்வதற்காக சில மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர்.

அப்போது, சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பேருந்தில் இருந்த நடத்துநர், படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என மாணவர்களை எச்சரித்துள்ளார்.

மேலும், அந்தப் பேருந்தின் கதவு மூடக்கூடிய வகையில் இருப்பதால், படிக்கட்டில் நின்றால் கதவு சரியாக மூட முடியாது என்றும், ஆபத்தான முறையில் பயணம் செய்யக்கூடாது என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அங்கிருந்த சில மாணவர்கள் நடத்துநரை சரமாரியாகத் தாக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து, பேருந்து போரூர் சிக்னல் அருகே நிறுத்தப்பட்டது. சம்பவம் குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர்கள் யார், எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவத்தில் நடத்துநர் தரப்பில் ஏதேனும் தவறு நடந்ததா அல்லது மாணவர்கள் தரப்பில் தவறு ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் காவல்துறை விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.