போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாக்க உலக நாடுகளுக்கு திருப்பீடம் அழைப்பு!
போரால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாக்க உலக நாடுகளுக்கு திருப்பீடம் அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூன் 25, வியாழனன்று, நியூயார்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் "குழந்தைகளும் ஆயுத மோதல்களும்" குறித்த விவாதக் கூட்டத்தில், போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று திருப்பீடத்தின் ஐ.நா. நிரந்தரக் கண்காணிப்பாளர் குழு வலியுறுத்தியது.
ஆயுத மோதல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உயிர், மாண்பு மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பது உலக நாடுகளின் தவிர்க்க முடியாத பொறுப்பு எனக் குறிப்பிட்ட திருப்பீடம், அவர்களின் துயரத்திற்கு உலகம் அளிக்கும் பதிலே, அனைத்துலக சட்டத்திற்கும், இறைவன் அளித்த மனித மாண்பிற்கும் வழங்கப்படும் மதிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துக்காட்டியது.
போர்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே என்றும், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில்கூட பலர் உயிரிழப்பதும் காயமடைவதும் கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ள அதன் அறிக்கை, மேலும், போரின் விளைவாக மனஉளைச்சல், உடல் ஊனம், இடம்பெயர்வு, குடும்பப் பிரிவு, கல்வி மற்றும் நலவாழ்வு வசதிகளை இழத்தல் போன்ற நீண்டகால பாதிப்புகளையும் குழந்தைகள் எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டியது.
குழந்தைகளை ஆயுத மோதல்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல் மற்றும் கடத்துதல் ஆகியவை, அவர்களின் குழந்தைப் பருவத்தையும் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் என்று திருப்பீடம் வலியுறுத்தியது.
போரில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளில்லா தொழில்நுட்பங்களின் அதிகரித்து வரும் பயன்பாடு குறித்தும் கவலை தெரிவித்த திருப்பீடம், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் "மகத்தான மானுடம்" என்ற திருத்தூது மடலை மேற்கோள்காட்டி, தொழில்நுட்பம் முடிவெடுப்பதில் உதவக்கூடும்; ஆனால் மனிதரின் அறநெறித் தீர்மானம், பொறுப்பு மற்றும் கணக்குப்பொறுப்புக்கு ஒருபோதும் மாற்றாக அமைய முடியாது என்று வலியுறுத்தியது.
மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடித்து, குழந்தைகளுக்கான சிறப்புப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை வலுப்படுத்த வேண்டும் என்றும் திருப்பீடம் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.
இறுதியாக, மக்கள் வாழும் பகுதிகளில் வெடிகுண்டு ஆயுதங்களின் மனிதாபிமான விளைவுகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான 2022ஆம் ஆண்டின் அரசியல் பிரகடனத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டது.