பீகாரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்… வீதியில் அடுத்தடுத்து துன்புறுத்தப்படும் பெண்கள்!
பீகாரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்… வீதியில் அடுத்தடுத்து துன்புறுத்தப்படும் பெண்கள்!
பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் ஜமுய் நகரில் பயிற்சி வகுப்பிற்குச் சென்றுவிட்டு திரும்பிய 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மற்றும் மாணவியை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலான கண்டனங்களைப் பெற்றுள்ளது.
சம்பவத்தன்று, ஜமுய் நகரில் உள்ள பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் இருவரையும் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர், வாகனத்தை நிறுத்தச் செய்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கியதுடன், மாணவியிடம் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்களை விட்டுவிடுமாறு மாணவி கெஞ்சியபோதும், அந்த கும்பல் அவர்களை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அக்கும்பலில் இருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோவில் இடம்பெற்றுள்ள மற்ற நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜமுய் பகுதியில் வெளியான வீடியோ அதிர்ச்சியளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி பீகார் அரசையும் விமர்சித்துள்ளார்.
பீகாரில் மேலும் ஒரு அதிர்ச்சி
ஜமுய் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்திலும் இளம்பெண் ஒருவர் சாலையில் வம்பிழுக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் மற்றொரு சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலான நிலையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பீகாரில் அடுத்தடுத்து வெளியாகும் இதுபோன்ற வீடியோ சம்பவங்கள் பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.