பேட்டிங் செய்யாமல் இருக்க நாடகம்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு தடை விதிக்க வாய்ப்பு
பேட்டிங் செய்யாமல் இருக்க நாடகம்.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு தடை விதிக்க வாய்ப்பு
கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கிற்கு 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் போலியாக காயம் ஏற்பட்டதாக அவர் நாடகம் ஆடி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை தவிர்த்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும், மூத்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானின் கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இமாம் உல் ஹக் விளையாடினார். ஆனால், கெண்டைக்கால் தசைப்பிடிப்பு காயம் காரணமாக அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய வரவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் பொய்யான காயத்தை காட்டி ஏமாற்றியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை பிசிபி அமைத்துள்ளது. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம்.
முன்னதாக, கடந்த 2025 மார்ச் மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் இமாம் உல் ஹக் இதேபோன்று போலியாக காயம் ஏற்பட்டு இருப்பதாகக் காட்டி மருத்துவக் குழுவினரை ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நீக்கப்பட்ட 7 வீரர்களில் இமாம் உல் ஹக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு நாடு திரும்பிய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஸ்வான், சமீபத்திய போட்டிகளில் மிக மோசமான ஷாட்களை ஆடி தனது விக்கெட்டுகளை இழந்ததால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். இதனால் அவர் இனி பாகிஸ்தான் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கைகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.