📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 27, 2026 06:00 PM

ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை இழந்துவிட்டது தமிழ் சினிமா.. கமல்ஹாசன் கண்ணீர் பதிவு

ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை இழந்துவிட்டது தமிழ் சினிமா.. கமல்ஹாசன் கண்ணீர் பதிவு

சென்னை: தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத சோக மாதமாக இந்த ஜூன் மாறியுள்ளது. இந்தியத் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10ஆம் தேதி காலமான நிலையில், அவரது சிஷ்யரும், 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் கே. பாக்யராஜும் ஜூன் 27ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஒரே மாதத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களை இழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ், பின்னர் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு பரிமாணங்களில் வெற்றிக்கொடி நாட்டி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பள்ளியை உருவாக்கியவர். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசனின் உருக்கமான பதிவு: பாக்யராஜின் மறைவு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ராஜாக்கள்: கமல்ஹாசனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாரதிராஜா மற்றும் பாக்யராஜா ஆகிய இருவருடனும் பல ஆண்டுகள் நெருங்கிய நட்பும், கலைப் பயணமும் கொண்டிருந்த கமல்ஹாசன், ஒரே மாதத்தில் இருவரையும் இழந்த வேதனையை இந்த சில வரிகளில் வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசு மரியாதை: ஒரே மாதத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு படைப்பாளிகளை இழந்துள்ள இந்த சம்பவம், திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. பல தலைமுறை ரசிகர்களை தனது படைப்புகளால் மகிழ்வித்த பாரதிராஜாவும், பாக்யராஜும் இனி இல்லையென்றாலும், அவர்கள் உருவாக்கிய படைப்புகள் என்றும் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகவே இருக்கும் என திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டதைப் போல பாக்யராஜுக்கும் அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.