📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 13, 2026 06:33 AM

ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை : தமிழக அரசு தகவல்

ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை : தமிழக அரசு தகவல்

ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை : தமிழக அரசு தகவல்

சென்னை: ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தும் மூன்று ஓய்வூதிய திட்டத்தின் பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர் விடுமுறையால் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தாமதம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை, வரும் 14ம் தேதி முதல் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில், சுமார் 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் சுமார் 19,20,858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

மேற்காணும் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026- வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகையை, இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் இம்மாதம் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரை இந்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஓய்வூதியத் தொகை 14.09.2026 முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது