📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 13, 2026 06:05 PM

நேப்பாளப் பெருவெள்ளத்தில் மாயமான சிங்கப்பூர் பெண்ணின் கணவர் உருக்கம்

நேப்பாளப் பெருவெள்ளத்தில் மாயமான சிங்கப்பூர் பெண்ணின் கணவர் உருக்கம்

நேப்பாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தமது மனைவி காணாமல் போன நிலையில், அவர் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தமது ஏழு வயது மகளுக்காகத் தாம் துணிச்சலுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் சிங்கப்பூரரான திரு செல்வகணேஷ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குப் பிறகு காணாமல்போன ஒன்பது சிங்கப்பூரர்களில், அரசு நீதிமன்ற ஊழியரான 40 வயது ஷாலினி தேவியும் ஒருவர்.

புனித யாத்திரைக்காக நேப்பாளம் சென்றிருந்த திருமதி ஷாலினி, ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 9 மணியளவில் கடைசியாகத் தமது கணவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தாம் கியிரோங் துறைமுகக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிக் கட்டடத்தில் இருப்பதாகவும் விரைவில் திபெத்திய எல்லைக்குச் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எல்லை கடந்த பிறகு அழைப்பதாகக் கூறிய திருமதி ஷாலினியிடமிருந்து அதன் பிறகு எந்த அழைப்பும் வரவில்லை. அவர்கள் உரையாடிய அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் நேப்பாளம் மற்றும் திபெத்தின் மத்தியப் பகுதிகளில் கடுமையான வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,000க்கும் அதிகமானோரைக் காணவில்லை. பாய்ந்தோடி வந்த சேறும் சகதியும் நிறைந்த வெள்ளத்தில் அந்தக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிக் கட்டடம் அடித்துச் செல்லப்பட்ட கொடூரக் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

அன்றிரவு தமது ஏழு வயது மகளிடம் அம்மாவைக் காணவில்லை என்பதைத் தவிர வேறெதையும் சொல்ல முடியாமல் தவித்ததாக 43 வயது திரு செல்வகணேஷ் கூறினார். திருமதி ஷாலினியின் கைப்பேசியின் கடைசி இருப்பிடம் அந்த எல்லைக் கட்டடத்தைக் காட்டியதாலும் அவர் எல்லையைக் கடக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாலும் அவர் பேரழிவு நிகழ்ந்த மையப்பகுதியிலேயே சிக்கி உயிரிழந்துவிட்டார் என்பதை மறுநாளே தாம் உணர்ந்துகொண்டதாகத் திரு செல்வகணேஷ் தெரிவித்தார்.

தமது மனைவியின் ஆத்மசாந்திக்காக முறைப்படியான இறுதிச்சடங்குகளைச் செய்ய விரும்பிய திரு செல்வகணேஷ், அக்டோபர் மாதம் 9ஆம் தேதியன்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசு நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட சக ஊழியர்களின் பங்கேற்புடன் இறுதிப் பிரார்த்தனைகளைச் செய்து முடித்தார்.

சமூகப் பணிகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட திருமதி ஷாலினி, பொங்கோல் 21 சமூக மன்ற மகளிர் செயற்குழு மற்றும் பொங்கோல் ஷோர் இன, சமய நல்லிணக்கக் குழு போன்றவற்றில் பங்காற்றியுள்ளார்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இருமுறை மொட்டை அடித்து நிதி திரட்டியதுடன், இந்தியாவில் உள்ள ஏழைச் சிறாரின் உணவு, கல்விக்காகத் தொடர்ந்து உதவிகளையும் செய்து வந்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இறுதிச்சடங்குகள் நிறைவடைந்த போதிலும், அதிகாரபூர்வ மரண சான்றிதழ் இல்லாததால் மாதாந்தர வீட்டுக் கடன் தவணை மற்றும் காப்புறுதிச் சந்தா செலுத்துவது போன்ற நிர்வாக விவகாரங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் முடங்கியுள்ளதாகத் திரு செல்வகணேஷ் குறிப்பிட்டார்.

நேப்பாளச் சட்டப்படி, காணாமல் போன ஒருவரை சட்டபூர்வமாக இறந்தவராக அறிவிக்க 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில், பேரிடரில் காணாமல்போனவர்களுக்கான இக்காலகட்டத்தை ஒன்றரை மாதங்களாக நேப்பாள அதிபர் அண்மையில் குறைத்து அறிவித்துள்ளது தமக்கு மாபெரும் நிவாரணம் அளித்துள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வ சான்றிதழ் கிடைத்துத் தம் குடும்பம் இயல்பு நிலைக்குத் திரும்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.