📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 03, 2026 02:12 PM

மூன்று தேர்கள், நான்கு தெய்வங்கள் ஒன்றாய்க் கூடிய திருவிழா

மூன்று தேர்கள், நான்கு தெய்வங்கள் ஒன்றாய்க் கூடிய திருவிழா

காமாட்சி சந்திரசேகர்

சிங்கப்பூரின் வெவ்வேறு ஆலயங்களைச் சேர்ந்த அம்மன் உற்சவத் திருவுருவங்களை தோ பாயோவிலுள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலய வளாகத்தில் பக்தர்கள் ஒருசேர தரிசித்தனர்.

நவாக் ஷரி திருவிழாவின் முத்தாய்ப்பு அங்கமாக தேர்களின் சங்கமம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) கோலாகலமாக நடைபெற்றது.

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், சிராங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களிலிருந்து தேர்கள் இந்த ரத உற்சவத்தில் பங்கேற்றன.

மூன்று ஆலயங்களிலிருந்து உற்சவத் திருமேனிகளைத் தாங்கும் வெள்ளித் தேர்கள் தோ பாயோ ஆலய முகப்பில் கூடுவது வழக்கம்.

மார்ச் 5 தொடங்கிய இந்தப் பதினொரு நாள் திருவிழா, ஸ்ரீ வைராவிமட காளியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலகட்டமாகும்.

மலர்களாலும் மணி நிறைந்த அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் மின்னும் வெள்ளித் தேர்களில் பவனி வந்தன.

நான்கு திருவுருவங்களைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“தேவியர்களை அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஒரே இடத்தில் காண்பது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது,” என்று 50 வயது பக்தர் உமாதேவி கூறினார்.

நான்கு கோயில்களின் ஒருங்கிணைப்புக்கு ஆற்றப்பட்ட உழைப்பு சாதாரணமன்று என ஆலயத்தில் தொண்டு செய்துவரும் 34 வயதான தொண்டூழியர் பிரியவர்ஷினி தெரிவித்தார்.

இளையர்கள் காட்டிய ஈடுபாடு இவ்விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்ததாக ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரான விஜயந்திரன் கிருஷ்ணன், 67, தெரிவித்தார்.

“இளையர்கள் நம் சமயப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் முன்னின்று உழைக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.