முதல்வர் மீது தி.மு.க., உரிமை மீறல் புகார்
சென்னை:சட்டசபையில், காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், முதல்வர் விஜய் அளித்த பதிலுரையில், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். சர்க்காரியா கமிஷன் விவகாரம், 'டாஸ்மாக்' வழக்கில் அமலாக்கத்துறை அறிக்கை ஆகியவற்றை கூறி விமர்சித்தார். இதற்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், சட்டசபை தொடரின் கடைசி நாளான நேற்று, சபாநாயகர் பிரபாகரை சந்தித்து, தி.மு.க., துணை கொறடா கோவி.செழியன், முதல்வர் விஜய் மீது உரிமை மீறல் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 'சட்டசபை விதி 719ன் கீழ், முதல்வர் விஜய், சபை விதிகளை மீறி பேசியுள்ளார். சர்க்காரியா கமிஷன் விவகாரம் முடிந்து போன ஒன்று; சபையில் இல்லாத கருணாநிதி, மாறன் ஆகியோரை குறிப்பிட்டு பேசி, சபை கண்ணியத்தை குறைந்துள்ளார். அதேபோல், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை நடத்து வருகிறது; நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுதொடர்பாகவும் பேசி உள்ளார். தொடர்ந்து, சபை கண்ணியத்தை குலைக்கும் வகையில் முதல்வர் பேசி வருகிறார். இது, சபை உரிமை மீறல் பிரச்னை. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.