முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது
முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது - நயினார் நாகேந்திரன்
முதலமைச்சர் மேட்டூர் சென்றதற்கு மட்டும் ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Published : September 5, 2026 at 6:55 PM IST
சென்னை: முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சட்டப்பேரவையில் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று முதலமைச்சர் பேசுகிறார். அவர் என்ன கையில் அரிவாள், கம்புடன் வருவாரா? அப்படி என்ன பேசப்போகிறார்? ஏற்கனவே சட்டமன்றத்தில் முதலமைச்சர் எதுவும் பேசுவதில்லை.
தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். சிறு குழந்தைகள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதுதொடர்பாக முதலமைச்சர் பேசப் போகிறாரா?
இல்லையெனில், கோவையில் நடந்த படுகொலை சம்பவங்கள் போன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்துள்ளன. இதுகுறித்து பேசப்போகிறாரா? சட்டசபையில் சினிமா வசனம் பேசுவது உகந்தது அல்ல. முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் தொடர்பாக அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். ஒரு சங்கத்தை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.
விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த வாரம்தான் திறந்து விடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மேட்டூர் சென்றதற்கு மட்டும் ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதலளித்த அவர், "தமிழ்நாட்டில் தமிழ் தான் இருக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.