“நண்பன்” தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய முரளி விஜய்.. ரசிகர்கள் கொந்தளிப்பு.. என்ன நடந்தது?
“நண்பன்” தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய முரளி விஜய்.. ரசிகர்கள் கொந்தளிப்பு.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், தினேஷ் கார்த்திக் குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை காரணங்களால் நீண்ட காலமாகப் பேசாமல் இருந்த நிலையில், திடீரென தினேஷ் கார்த்திக் குறித்து முரளி விஜய் மேடையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பழைய கதைகளை கிளறி முரளி விஜய்-ஐ விமர்சித்து வருகின்றனர்.
தமிழக கிரிக்கெட் சங்க விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய முரளி விஜய், "நான் தினேஷ் கார்த்திக் குறித்துப் பேச வேண்டும். இது பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத் தெரியலாம். ஆனால் நான் அவரை எனது சிறுவயது முதலே பார்த்து வருகிறேன். தமிழகம் கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்டர்களில் அவரும் ஒருவர். அவர் ஒரு சிறந்த ஆளுமை மற்றும் எனது நெருங்கிய நண்பர். நான் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்று அவரது பேட்டிங்கை ஒரு ரசிகனாக ரசித்துப் பார்த்துள்ளேன். அவரைப் போல் யாரும் விளையாடி நான் பார்த்ததில்லை. அவர் தனது கிரிக்கெட் அறிவின் மூலம் எனக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார், அதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே கடந்த 2010-களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாகப் பெரிய விரிசல் ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக்கின் அப்போதைய மனைவியான நிகிதா வஞ்சாராவை முரளி விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.
இதன் பிறகு தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வாழ்வில் பெரும் பின்னடைவை சந்தித்தார். பின்னர் எல்லாவற்றில் இருந்தும் மீண்ட தினேஷ் கார்த்திக் 2015-ஆம் ஆண்டு இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். கிரிக்கெட்டில் தனது பேட்டிங் பாணியை மாற்றி இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக உருவெடுத்த அவர், தற்போது ஆர்சிபி அணியின் ஆலோசகராகவும், ஊடகங்களில் கிரிக்கெட் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில்தான் நீண்ட கால மனக்கசப்புகளை கடந்து முரளி விஜய் பொது மேடையில் தினேஷ் கார்த்திக்கை 'நெருங்கிய நண்பர்' என்று பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பழைய கதைகளை கிளறி உள்ளது. பலரும் முரளி விஜய்-ஐ விமர்சித்து வருகின்றனர்.