மதுரையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
மதுரை: மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, மும்மதங்களையும் சேர்ந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று (செப்., 28) மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவுக்காக மதுரை வந்த முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சாலை வழியாகச் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது, மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்ற பெண் குழந்தையை கையில் தூக்கி வாஞ்சையுடன் வாழ்த்தினார் முதல்வர் விஜய்.
படம்: ந.தங்கரத்தினம்
அதோடு, முதல்வர் வருகையை முன்னிட்டு ராஜாஜி மருத்துவமனை பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது. மாநகரப் பகுதிகளில் முதல்வர் வந்து செல்லும் சாலைகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் காணப்பட்டன.
குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய முதல்வர் விஜய்:
முதல்கட்டமாக, முதல்வர் விஜய், தன்னுடன் மேடையில் இருந்த மூன்று தாய்மார்கள் கையிலிருந்த குழந்தைகளுக்கு மட்டும் மோதிரத்தை கையில் மாட்டிவிட்டார்.
தொடர்ந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த தாய்மார்கள் கையில் மோதிரத்தை வழங்கினார். அப்போது சில பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கும் மோதிரத்தை முதல்வரே கையில் மாட்டிவிடும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் அக்குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கைகளிலேயே மோதிரத்தை மாட்டிவிட்டார்.
சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி அன்போடு கேட்டனர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்கள் குழந்தைகளை கையில் தூக்கி வைத்து கொஞ்சியதோடு பெயர் சூட்டினார். அப்போது ஒரு பெண், உணர்ச்சி பெருக்கத்தில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வரைப் பார்த்து அழுதார். அந்தப் பெண்ணை முதல்வர் விஜய் கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார்.
கடைசியாக முதல்வர் விஜய், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பயனடைந்த தாய்மார்கள், அவர்கள் குழந்தைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதல்வர் கையில் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தும், அனைத்து தாய்மார்களுடன் முதல்வர் விஜய் ‘செல்ஃபி’ புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
முன்னதாகப் பேசிய அமைச்சர் அருண் ராஜ், ”தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் தங்கத்துக்கு அரசே உத்தரவாதம். முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பிரசவமாகி வீடு திரும்பும் போதே மோதிரங்கள் வழங்கப்படும்.
சித்திரைத் திருழாவில் தங்கைக்காக அண்ணன் சீர் சுமந்து வரும் பாசப் பூமியில் தாய்மாமன் தங்க மோதிரம் பாசத்திட்டம் தொடங்கப்படுவது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்” என்று கூறினார்.