மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் குடமுழுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா
மதுரை, செப்.22–மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் குடமுழுக்கு வரலாற்று நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.தமிழ்நாட்டின் கலை மற்றும் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக, அளவிட முடியாத ஆன்மீகப் பெருமைகளைக் கொண்டு திகழும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கடந்த 17ஆம் தேதி குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. இந்த வரலாற்று நிகழ்வை அஞ்சல் துறை சார்பில் பதிவு செய்யும் வகையில், மீனாட்சி சுந்தரேசுவரர் குடமுழுக்கு சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது.சிறப்பு அஞ்சல் உறை:இதற்கான விழா மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், அஞ்சல் துறையின் தென்மண்டல இயக்குனர் பி.எஸ்.நீரஜ் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட, அதனைத் கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ருக்மணி பழனி ராஜன் பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் மருத்துவர் எம்.சீனிவாசன், செல்லையா, சுப்புலட்சுமி, மீனா, கோவில் உதவி ஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் பொற்றாமரை குளம், திருக்கல்யாணம் மண்டபத்தின் இரு தூண்கள் ஆகிய படங்களுடன், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கோவிலின் ஆன்மீகக் கட்டிடக்கலைச் சிற்பங்களின் சிறு குறிப்புகள் இந்த சிறப்பு அஞ்சல் உறையில் அச்சிடப்பட்டுள்ளன.