மதுராந்தகத்தில் திமுகவின் வெற்றி போன முறை மிஸ் ஆயிருச்சு; இந்த முறை மிஸ் ஆகக்கூடாது: மு.க.ஸ்டாலின் பேச்சு
மதுராந்தகத்தில் திமுகவின் வெற்றி போன முறை மிஸ் ஆயிருச்சு; இந்த முறை மிஸ் ஆகக்கூடாது: மு.க.ஸ்டாலின் பேச்சு
செங்கல்பட்டு: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, தவெக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 5 முனை போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் தொகுதிகளில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால், தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்; "திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மதுராந்தகத்தில் திமுகவின் வெற்றி போன முறை மிஸ் ஆயிருச்சு; இந்த முறை மிஸ் ஆகக்கூடாது. திமுக வேட்பாளரை சூட்கேஸ் காட்டி ரேட் பேச முடியாது; கேஸ் போட்டும் மிரட்ட முடியாது. தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் மக்களிடம் திணிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். மெஜாரிட்டி இல்லாத ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலில் நிற்கின்றனர்.
5 ஆண்டுகள் எம்.எல்.ஏ எதுவும் செய்யவில்லை என அவரை வைத்துக்கொண்டே அமைச்சர் பரப்புரை செய்கிறார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளதாக விஜய் அரிய கண்டுபிடிப்பு. தவெகவுக்கு தக்க பாடத்தை இடைத்தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும். மக்களை இளக்காரமாக நினைக்கும் தவெகவை மக்கள் அடக்க வேண்டும். தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, விரட்டி அடிப்பு என செய்திகள் வருகின்றன. தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து சுயமரியாதை உள்ள மக்கள் என்பதை காட்டிவிட்டீர்கள். தவெக எனும் கோமாளிக் கூட்டத்தை கவனிக்காமல் விட்டுவிட்டோம்.
எஸ்.ஐ.ஆரில் பல லட்சம் மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் திமுக வெற்றி பறிபோனது. திமுகவின் கூட்டணி கட்சிகளின் தயவால் தவெக ஆட்சி நடக்கிறது. ஆதரவு கொடுத்த கட்சிகளை நம்பாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார் விஜய். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்துள்ளது. தவெக ஆட்சியில் கொத்து கொத்தாக கொலைகள் நடக்கின்றன. 6 மாதம் பொறுத்திருப்போம் என நினைத்தேன்; ஆனால் தவெக ஆட்சியில் ஒரு மாதத்தை கூட தாங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களில் பாதியில் தவெகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர். பச்சிளம் குழந்தைகள் குடிக்கும் ஆவின் பாலை தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க முடியாத ஆட்சி நடக்கிறது. தவெக அரசால் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்ததா?.
டீ குடித்து பந்தா காட்டும் முதலமைச்சருக்கு டீ விலை உயர்வு தெரியுமா?. அரிசி, சர்க்கரை, காய்கறி என அனைத்தின் விலையும் உயர்ந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் ரீல்ஸ் எடுத்து கொண்டிருக்கிறார்கள். பெரம்பூர் தொகுதிக்கே ஒருமுறைதான் சென்ற விஜய், மதுராந்தகத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய்க்கு ஏன் இவ்வளவு பதட்டம்?. மதுராந்தகத்தில் மக்கள் நடமாட்டமே இல்லாத சந்து பொந்துகளில் கூட பரப்புரை மேற்கொள்கிறார் விஜய். தோல்வி பயத்தால் டீ கடை, வயலில் முதலமைச்சர் கால் கீழே இறங்கியுள்ளது.
உங்களுடைய பயம் எனக்கு பிடித்துள்ளது முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் ஆட்சியின் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை. தேர்தல் முடிந்துவிட்டால் மக்களை முதல்வர் விஜய் திரும்பிக் கூட பார்க்கமாட்டார். நீங்கள் முதலமைச்சராக என்ன அமெரிக்க ஜனாதிபதியாக கூட ஆகுங்கள். அமைச்சர்கள் பேசும்போதே மின்சாரம் கட் ஆகிறது; அதனை முதலில் கவனியுங்கள் சிஎம் சார். திமுக செய்த திட்டங்களை சொன்னால் மட்டும் கோபம் பொத்துகிட்டு வரும். மக்கள் பணம் தானே? என்று கேட்கிறார். இப்போ தங்க மோதிரம் போட்டீங்களே, அதென்ன உங்க வீட்டு காசா?. உங்க அப்பன் வீட்டு காசா?.
கல்லணையை கரிகாலச் சோழன் அவரது சொந்த பணத்திலா கட்டினார் என்று கேள்வி கேட்பாரா விஜய்?. ஏமாற்றுப் பேர்வழிகளில் கொட்டத்தை அடக்க தோல்வியை பரிசாகத் தர வேண்டும். தவெக ஆட்சியை நேர் வழியில் மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் குறுக்கு வழியில் மட்டுமல்ல; திருட்டு வழியில் செல்கிறது தவெக ஆட்சி. தவெக ஆட்சி என்னென்ன தவறுகள் செய்கிறது என்பதை செய்தித் தாளில் விஜய் படிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததுதான் தூய சக்தியா?. சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க ரகசிய கடிதம் எழுதியதுதான் தூய சக்தியா?.
தமிழ்நாட்டில் நடப்பது கார்ப்பரேட் மாஃபியா கும்பல் ஆட்சி. இந்தியாவே ஞானேஷ்குமார் பற்றி பேசும்போது முதல்வர் விஜய் ஏன் வாயை திறக்கவில்லை. தேர்தல் முறைகேடுகள் குறித்து வாய் திறக்காதவர் எல்லாம் ஒரு அரசியல் கட்சித் தலைவரா?. தவெகவுக்கு பின்னால் யார் உள்ளார்கள் என்பதை விஜயை நம்பி சென்ற கட்சிகள் அனைவரும் விரைவில் உணர்வார்கள். மாற்றம் என்பதை நம்பி சென்ற மக்கள் ஏமாற்றம் அடைந்ததை விரைவில் உணர்வார்கள். தமிழ்நாட்டில் அனைத்து விஷயங்களிலும் பின்னோக்கி செல்கிறோம். தமிழ்நாடே இடைத்தேர்தல் தீர்ப்புக்குதான் காத்திருக்கின்றது. இடைத்தேர்தலில் மக்கள் கொடுக்கும் தீர்ப்புதான் இனி எந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடப்பதை தடுக்கும்" என பேசினார்.