மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்
தாராபுரம்: தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், இன்று தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யாபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்தனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியாகின.
இந்த 2 தொகுதிகளுக்கு தற்போது இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே 5 முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் இ.பரந்தாமன் போட்டியிடுகிறார். பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்த போது திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தாராபுரம் தொகுதியில திமுக சார்பில் மகளிர் அணியைச் சேர்ந்த எஸ். சுகன்யா போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்த போது திமுக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனிடையே வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன், "மதுராந்தகம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், வெற்றி திமுக-வுக்கு தான்'. அவர்கள்கூட்டணி பெயரில் வேண்டுமானால் வெற்றி இருக்கலாம்.. ஆனால் அக்டோபர் 9-ஆம் தேதி வெற்றி திமுக-வுக்கு தான் என்றார்.