மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா.. காரணம் இதுதானா ? தமிழ்நாடு பாஜகவில் வரும் மாற்றம்!
மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா.. காரணம் இதுதானா ? தமிழ்நாடு பாஜகவில் வரும் மாற்றம்!
மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதே போல தனது மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்தும் விலகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்த இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜகவை பொறுத்தவரை ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். இதனால் ஒருவருக்கு வேறு பதவியை வழங்க பாஜக தலைமை விரும்பினால் அவரை ஏற்கனவே வகிக்கும் பதவியில் இருந்து பாஜக தலைமை விடுவிக்கும். இதற்கு முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை அப்பதவியில் இருந்து விடுவித்து அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக வழங்கி அவரை மத்திய அமைச்சராக்கியது.
அந்த வகையில் இந்த முறை அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு மீண்டும் தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள பங்கஜ் சவுத்ரி (Pankaj Chaudhary) உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராகவும், ஹர்ஷ் மல்ஹோத்ரா Harsh Malhotra) டெல்லி மாநில பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் விரைவில் மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், எல்.முருகனின் ராஜினாமாவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2020 மார்ச் முதல் 2021 ஜூலை வரை தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் பதவி வகித்தார்.
2020ஆம் ஆண்டு பாஜக நடத்திய வேல் யாத்திரையின் மூலம் மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். இதற்கு முன்னர் மத்திய அமைச்சராக இருந்த எல்.முருகன் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றியை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் எல்.முருகன் தலித் என்பதால்தான் அவருக்கு உரிய மரியாதை அளிக்காமல், இப்படி பாஜக அவரை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறது என்றும் நிர்மலா சீதாராமன் போன்றவர்களை பாஜக இவ்வாறு செய்யாது என்ற விமர்சனமும் சமூக வலைத்தளத்தில் முன்வைக்கப்பட்டது. பாஜக சார்பில் தமிழ்நாட்டில் எல்.முருகன் மட்டும் தான் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். தற்போது அவரும் பதவி விலகியிருப்பதை எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதில் இருந்து நாள்தோறும் தமிழ்நாட்டு அரசியலில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருவது விவாத்தை ஏற்படுத்தியிருக்கிறது.