மோசடியில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனை: விரைவில் புதிய மசோதா
இளையர் உட்பட மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை மூலம் தடுப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கான புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று மூத்த அமைச்சர் கா. சண்முகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தார்.
அந்த மசோதா, மறுவாழ்வு தண்டனை விதித்த உயர்நீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு இனி பின்பற்றப்படக் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தும் என்றார் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு சண்முகம்.
இளையர்கள் உட்பட மோசடிக்காரர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை தரும் வகையில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) நாடாளுமன்றத்தில் கூறினார்.
செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்தத் தீர்ப்பில், இளம் வயதுக் குற்றவாளிகளின் மேல்முறையீடுகள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்குக் கடுமையான தண்டனைக்குப் பதிலாக நன்னடத்தைக் கண்காணிப்பு மற்றும் சமூகப் பணி சார்ந்த தண்டனைகள் விதிக்கப்பட்டதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.
மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “இளம் குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்படுவதில் வழக்கமாக அல்லது முன்னுரிமை அடிப்படையில் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையான பரிசீலனையாக இருக்கும்” என்று கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இது மோசடிக் குற்றங்களுக்கான தண்டனை வழிகாட்டுதல்களில் வரையறுக்கப்பட்ட அணுகுமுறைக்கு முரணாக உள்ளது என்றும் இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படக் கூடாது என்பதைப் புதிய சட்டம் மிகவும் தெளிவாக உணர்த்தும் என்றும் திரு சண்முகம் கூறினார்.
மோசடிகளில் இளையர்கள் ஈடுபடுவது குறித்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளித்து அவர் பேசினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“வயது வேறுபாடின்றி, எந்தவொரு குற்றவாளி மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவலை நாங்கள் பரப்ப விரும்பினோம். இத்தகைய வழக்குகளில் பலவற்றில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால், குற்றம் செய்யத் துணியும் மற்றவர்களும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள்,” என்று அவர் கூறினார்.
“இந்தச் செய்தி பரவும்போது, இளையர்கள் உட்பட அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இது மோசடியில் ஈடுபடுவதைக் கடினமாக்குவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் சந்திக்கும் இழப்புகளையும் குறைக்க உதவும்,” என்றார் திரு சண்முகம்.
கடந்த சில ஆண்டுகளில் தண்டனைகள் படிப்படியாகக் கடுமையாக்கப்பட்ட பிறகு மோசடிகளால் ஏற்படும் பண இழப்புகள் சற்றுக் குறைந்திருந்தாலும் அரசாங்கத்தின் தடுப்பு நடவடிக்கைகளை முறியடிக்க மோசடிக்காரர்கள் தொடர்ந்து தங்கள் வழிகளை மாற்றியமைத்து வருகின்றனர்.
“எனவே, மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதற்கான நேரம் இதுவன்று.
“மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடிகளுக்குத் துணைபுரிபவர்கள் மீதான மென்மையான போக்கு, சிங்கப்பூரர்கள் பலர் மோசடிகளில் சிக்குவதற்கு வழிவகுத்துவிடும்,” என்று திரு சண்முகம் தமது பதிலில் குறிப்பிட்டார்.