📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 06:04 PM

மல்லுக்கட்டும் மதுராந்தகம்… மரகதம் மீது மக்கள் கோபம்? இடைத்தேர்தலில் தவெகவிற்கு காத்திருக்கும் ஷாக்!

மல்லுக்கட்டும் மதுராந்தகம்… மரகதம் மீது மக்கள் கோபம்? இடைத்தேர்தலில் தவெகவிற்கு காத்திருக்கும் ஷாக்!

மல்லுக்கட்டும் மதுராந்தகம்… மரகதம் மீது மக்கள் கோபம்? இடைத்தேர்தலில் தவெகவிற்கு காத்திருக்கும் ஷாக்!

மரகதம் குமரவேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது கட்சி மாறலும் உள்ளூர் அதிருப்தியும் தவெகவின் மதுராந்தகம் இடைத்தேர்தல் கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேலுக்கே மீண்டும் ஆளுங்கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, தொகுதி மக்களிடையே கலவையான எதிர்வினையை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

தனித்தொகுதியான மதுராந்தகத்தில் கிராமப்புற வாக்காளர்களே அதிகம். இதில் பட்டியலின வாக்காளர்களும், அதற்கு அடுத்தபடியாக வன்னியர் சமூக வாக்காளர்களும் கணிசமாக உள்ளனர்.

கடந்த தேர்தலில் மரகதம் குமரவேல் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அதிமுகவின் வாக்கு வங்கி, பாமகவின் ஆதரவு மற்றும் அவரது தனிப்பட்ட செல்வாக்கு ஆகியவை வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அரசியல் சூழல் மாறியிருப்பதாக உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மரகதம் தவெகவுக்கு சென்றதை அதிமுகவில் உள்ள பட்டியலின வாக்காளர்கள் பெரிதாக எதிர்மறையாக பார்க்கவில்லை என்றாலும், அதிமுகவின் பிற சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடையே அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல... ‘விஜயை நம்பி வந்தோம்... இங்கேயும் பழைய பவர்தானா?’ என்ற கேள்வி தவெக நிர்வாகிகள் சிலரிடமும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுராந்தகத்தில் தவெகவை நோக்கி வந்த இளைஞர்களில் ஒரு பகுதியினர், திமுக – அதிமுகவுக்கு மாற்றாக விஜயை முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிக்குள் வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே தொகுதியில் அரசியல் செல்வாக்கு கொண்டிருந்த மரகதம் குமரவேல் தவெகவுக்குள் முக்கியமான பவர் சென்டராக மாறுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், ‘விஜய் கட்சியில் புதுசா அரசியல் செய்ய வந்தோம்... இங்கேயும் பழைய அரசியல்தானா?’ என்ற மனநிலை சில உள்ளூர் நிர்வாகிகளிடம் இருப்பதாக களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, கட்சி சார்பற்ற வாக்காளர்களிடையேயும் மரகதம் மீது அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக தொகுதியின் நீண்டகால பிரச்னைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

மதுராந்தகத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை. படாளம் சர்க்கரை ஆலை செயல்பாடு தொடர்பான பிரச்னைகள், ஈசூர்–வள்ளிபுரம் மேம்பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்கள், நகர்ப்புற வளர்ச்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பான எதிர்பார்ப்புகள், சாதிய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மக்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

‘இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்’ என்ற எதிர்பார்ப்புடன் வாக்களித்த நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு சென்றது சில வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக உள்ளூர் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இதனால், தற்போது தொகுதியில் கேட்கப்படும் கேள்வி வேறு மாதிரியாக இருக்கிறது.

“நம்பி ஓட்டு போட்டோம்... பதவியை விட்டுட்டு போயிட்டாங்க. இப்போ மறுபடியும் ஓட்டு கேட்டு வர்றாங்க. நாம யாருன்னு காட்டணும்!” என்ற கோபமான பேச்சுகள் சில பகுதிகளில் கேட்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், நகர்ப்புற வாக்காளர்களிடம் விஜய்க்கு இருக்கும் ஆதரவு தொடர்வதாகவும், மரகதம் மீதான அதிருப்தி நேரடியாக விஜய்க்கு எதிரான மனநிலையாக மாறிவிட்டது என்று கூற முடியாது என்றும் களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் கணக்கு விஜய் என்ற தனிப்பட்ட பிரபலத்துக்கும், மரகதம் மீதான உள்ளூர் அதிருப்திக்கும் இடையிலான மோதலாகவும் மாறியிருக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது.

மொத்தத்தில், ‘விஜய் முகம் போதுமா... வேட்பாளர் மீதான கோபத்தை அது சமாளிக்குமா?’ என்பதுதான் மதுராந்தக களத்தில் இப்போது உற்றுநோக்கப்படும் கேள்வியாக இருக்கிறது.