📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 19, 2026 09:31 PM

மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!

மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!

மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!

72 ஆண்டுகளைக் கடந்தும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும், ‘அடியே காந்தா’ வசனமும் தலைமுறைகளைத் தாண்டி ரசிகர்களை ரசிக்க வைக்கும் ‘ரத்தக்கண்ணீர்’ தமிழ் சினிமாவின் அழியாத காவியமாகத் திகழ்கிறது.

கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா!

பாசத்தைச் சொன்ன படம், காதலைச் சொன்ன படம், கண்ணியத்தைச் சொன்ன படம், கடவுளைச் சொன்ன படம், சமூகத்தைச் சொன்ன படம், சமூக அவலத்தைச் சொன்ன படம், கலையைச் சொன்ன படம், பழிவாங்குதலைச் சொன்ன படம் என படங்கள் வந்திருக்கின்றன. தனி மனித ஒழுக்கத்தை உரக்கச் சொன்ன படம் நினைவிருக்கிறதா?

ஒழுக்கத்தை மீறியவன் உருக்குலைந்த கதையைப் பார்த்திருக்கிறீர்களா? ’வாழ்க்கைல ஜெயிக்கிறதுக்கு ரத்தக்கண்ணீர் வடிச்சிருக்கேன்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லுவோம். ஆனால் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்கள் போல..! அதனால்தான் இன்றைக்கும் அந்தப் படத்தை, அதே பிரமிப்புடன் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

திருச்சி பொன்மலைக்கு அடுத்து சங்கிலியாண்டபுரம் எனும் ஏரியா இருக்கிறது. இந்தப் பகுதியை சைக்கிளில் ஆயிரம் முறையேனும் கடந்திருப்பேன். அப்படிச் செல்லும்போதெல்லாம் ஓரிடத்தில் என் கால்கள் பெடல் செய்ய மறுக்கும். ஓரிடத்தில் ஓரங்கட்டுவேன். எதிர்திசையில் ரோட்டுக்கு அந்தப்பக்கமாக, ஒரு வீடு, பங்களா போல் இருக்கும். பழங்காலத்து வீடு அது. வாசலில், ‘எம் ஆர் ராதா இல்லம்’ என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கும். அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் என் கழுத்து அனிச்சையாக, அந்த வீட்டின் பக்கம் திரும்பும். மானசீகமாக மனசு சல்யூட் அடிக்கும். அந்த சங்கிலியாண்டபுரத்தில் உள்ள காமதேனு தியேட்டர், பொன்மலைப்பட்டி அன்னை திரையரங்கம், திருச்சி உறையூர் அருணா, கெயிட்டி, பால்பண்ணை அருகில் உள்ள கனி தியேட்டர் என பல தியேட்டர்களில், இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே எனக்குத் தெரியாது. ஒருவேளை எம் ஆர் ராதா இப்போது உயிருடன் இருந்து, ‘கணக்கே வைச்சிக்கலை சார்’ என்று சொன்னால், ‘ஏன் சுவத்துல கோடு போட்டுக்கறதுதானே’ என நக்கலடித்தாலும் அடிக்கலாம்!

இளம் வயதிலேயே நாடகத்துறைக்குள் நுழைந்து, அந்த நாடகத்திற்குள் சமூகக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டே வந்தார் எம்.ஆர்.ராதா. நாடகம், கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் அல்ல என்பதுதான் ராதாகிருஷ்ணன் என்கிற ராதாவின் கொள்கை. அவரின் நடிப்புத்திறன் கண்டு, திரையுலகம் வரவேற்று அழைத்துக்கொண்டது. 1937ம் ஆண்டில் திரையிலும் உலா வந்தவர், நான்கைந்து படங்கள் நடித்தார். பிறகு ‘என்னடா சினிமா இது, அடப்போங்கடா..’ என்று மீண்டும் மேடைக்கே வந்துவிட்டார்.

மேடையில் பேசினால், வீட்டுக்கு போலீஸ் வரும் காலம் இது. ஆனால், மேடையில் நாடக வசனங்களுக்காக, போலீஸ் தயாராக இருக்கும். எம் ஆர் ராதாவை கைது செய்யும். ‘இந்த நாடகத்தைப் போடக்கூடாது’ என்று தடை விதிக்கும். உடனே அடுத்த வாரமே... அதே ஊரிலேயே, நாடகம் போடுவார். இஷ்டத்துக்கு ஏதாவது தலைப்பு வைப்பார். உள்ளே நுழைந்தால், அதே எகத்தாளம், அதே நக்கல், அதே அணுகுண்டு வசனங்கள் என தெறிக்கவிடுவார்.

இப்படி 12 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிப்போனவரை மீண்டும் அழைக்க படாதபாடு பட்டார்கள். நாடகத்தில் நடிகர்திலகத்துக்கு ராதா சீனியர். ‘அண்ணே’ என்றுதான் சிவாஜி அழைப்பார். தவிர, எம் ஆர் ராதாவுக்கு முன்னே சிகரெட் பிடிக்கமாட்டார் ‘செயின் ஸ்மோக்கர்’ சிவாஜி.

‘ராதாண்ணே வாங்கண்ணே’ என்று சிவாஜி உட்பட பலரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். திருவாரூர் தங்கராசுவும் வலியுறுத்தினார். ஒருவழியாக, பனிரெண்டு வருடங்கள் கழித்து, எம்.ஆர்.ராதா மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்தார். கேமராவுக்கு முன்னே நின்றார். நடித்தார். அவரின் அசுரத்தன நடிப்பை மேடையில் பார்த்தவர்கள், திரையில் பார்த்து வெறிகொண்டு கரவொலி எழுப்பினார்கள். அவர் நடித்த படம் தீபாவளித் திருநாளுக்கு வந்தது. தீபாவளியென்றால் பட்டாசு, பாம், ஒத்தவெடி, சரவெடி எல்லாம் இருக்கும்தான். அப்படியொரு தெளசண்ட் வாலா பட்டாசாக, யானை வெடியாக, ஆட்டம்பாமாக வந்தது ‘ரத்தக்கண்ணீர்’.

ஒருபடத்துக்குள் என்னென்னவெல்லாம் சொல்லிவிடமுடியும்? என்போம். ’ஒருபடத்துக்குள் இவ்ளோ விஷயங்களைச் சொன்னால் எடுபடாதுப்பா’ என்று சமாதானம் சொல்வோம். ஆனால் ‘ஒரேயொரு படத்துக்குள் இவற்றைவிட என்ன சொல்லிவிடமுடியும்?’ என்பதுதான் ‘ரத்தக்கண்ணீர்’ எனும் காவியம்!

காசும்பணமும், வீடும் வாசலும் இருக்கலாம். அதற்காக பணத்திமிருடன் இருக்கக்கூடாது என்பதைச் சொல்லியிருந்தார் எம் ஆர் ராதா. வெளிநாட்டில் சென்று படிக்கலாம். அந்தக் கல்வியைக் கொண்டு நம் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டன. மேல்நாடுகளுக்குச் சென்றாலும் நம் நாட்டு நாகரீக, கலாச்சார, பண்பாடுகளை விட்டுவிடக்கூடாது, கேலி செய்யக்கூடாது, மறக்கக்கூடாது என்பதை அறிவுறுத்தினார் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. பெற்ற தாயை மதிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். மனைவியை நேசிக்க வேண்டும் என்று போதித்தார்கள். மனைவியைத் தவிர வேறு எவரையும் மனதாலும் நினைக்கக்கூடாது என்றும் மனைவிக்கு துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று சட்டையைக்கொத்தாகப் பிடித்து, முகத்தில் அறைந்து கோபம் கொப்புளிக்க பாடம் எடுத்தார்கள். குற்றம் புரிந்தவனுக்கு நிம்மதியே இல்லை, குற்றவுணர்ச்சி தரும் தண்டனையே மிகக்கொடுமையான தண்டனை என்று நம் மனசாட்சியைப் பார்த்து உலுக்கியெடுத்தார்கள். இவை அனைத்தையும் ரத்தமும் சதையுமாகச் சொன்னதால்தான் ‘ரத்தக்கண்ணீர்’ என்கிற மூன்று மணி நேரப்படத்தை, ஐந்து தலைமுறை கடந்தும் காவியமாக்கியிருக்கிறது.

மிகப்பெரிய பணக்காரராக மோகனசுந்தரமாக மோகனாக எம்.ஆர்.ராதா. பணத்திமிர், வெளிநாட்டில் படித்த திமிர், கலை என்பதையும் நாகரீகம் என்பதையும் தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு லீலைகளில் தன்னையே மறக்கிற மோகப் பித்து என்பதன் மொத்த உருவம். படத்தின் நாயகன் எம்.ஆர்.ராதா தான். அநேகமாக, என்னதான் படத்தின் ஹீரோவாக இருந்தாலும் படம் முழுக்க, படத்தில் ஹீரோ வருகிற காட்சிகள் முழுக்க, ஒரு ஹீரோவுக்கு கைத்தட்டல் கிடைக்குமா, கிடைத்திருக்குமா... தெரியவில்லை. அப்படி, படம் முழுக்க, காட்சிக்குக் காட்சி கரவொலிகளை, விசில் சத்தத்தை வாங்கியவர் எம்.ஆர்.ராதா எனும் மகா அசுரனாகத்தான் இருக்கமுடியும்!

அம்மாவை, கவுன் போட்டுக்கொள்ளச் சொல்வார். கூரை மேலே நெருப்பு இருந்தா அணைக்கிறே. மலையில் ஏத்தினா மட்டும் கும்பிடுறே என்று நாத்திகம் பேசுவார். இவரின் டயலாக் டெலிவரியில், வெடித்துச் சிரித்தார்கள் ரசிகர்கள். ஆத்திக நாத்திக பேதமின்றி ராதாவைக் கொண்டாடினார்கள் தமிழக மக்கள்!

அம்மாவை வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டே இருப்பார். ‘துரை தூங்கறார், துரை சாப்பிடுறார்னு சொல்லு’ என்பார். மாமனாரைப் பார்த்து, ‘என்ன மிஸ்டர் பிள்ளை, இதென்ன கையில நெத்தில கோடு’ என்பார். ‘என்னடா தண்ணி இது, ‘கார்ப்பரேஷன் தண்ணி போல இருக்கு’ என்று பகடி செய்வார். சாலைகளில் அரசுத்துறைகள் பள்ளம் தோண்டி, வேலை பார்த்துவிட்டு, பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டிருப்பது இன்றைக்கும் வாடிக்கை. அதை, ‘ரோடு போடுறதுக்கு கல்லை மட்டும் கொண்டாந்து இறக்கிடுறானுங்க. அப்புறம் ரோடு எப்பவாவது போடுறானுங்க’ என்று வேடிக்கையாகச் சொல்லியிருப்பார். இப்படி படம் நெடுக நக்கல் பேச்சு, நையாண்டி வார்த்தைகள், லூட்டி மாடுலேஷன்கள், அநாயசமான டயலாக் டெலிவரிகள், அசரடிக்கும் பாடி லாங்வேஜ்கள் என அதகளம் பண்ணியிருப்பார் எம் ஆர் ராதா.

காசுத் திமிரில், காம வேட்கையில், மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் உறவாடுவதும் அதனால் பெருநோய் எனப்படும் குஷ்டத்துக்கு ஆளாகி எல்லாவற்றையும் இழந்து, தெருவில் சுற்றித் திரிவதும், ஒருகட்டத்தில் கண் பார்வையும் பறிபோய், வாழத் தகுதியற்றவனாகி நொந்து அலைவதும் என ராதா ராஜ்ஜ்ஜியம், நம்மை மிரட்டியெடுக்கும். கலக்கியெடுக்கும். ஒரு கெட்டவனை, கேடு கெட்டவனை நாம் ரசிக்கவைத்ததுதான் ராதாவின் நடிப்புக்கு உதாரணம்!

தவறான பாதையில் செல்பவன் சீரழிவான் என்பதைச் சொல்லும் ஒன் லைன். ஆனால், திரைக்கதையாக்கிய விதத்திலும் கூர்மையான வசனங்களிலும் படத்திற்கு பலம் சேர்த்திருப்பார் வசனகர்த்தா திருவாரூர் தங்கராசு. அந்த வசனங்களையும் கதையையும் மோகன் எனும் கேரக்டரையும் என மொத்தமாகச் எம்.ஆர்.ராதா.

1952ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது ‘பராசக்தி’. நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ஏவி மெய்யப்பச் செட்டியாருடன் இணைந்து தயாரித்தார். சிவாஜியை அறிமுகப்படுத்தினார். சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் நாடகங்களில் ஒன்றாக நடித்தவர்கள். ‘என் அண்ணன் அவர். எனக்கு ராதாண்ணன் குரு’ என்று மரியாதையுடன் சொல்வார் சிவாஜி . ஏற்கெனவே திரையில் நடித்து வந்து, சினிமாவே வேண்டாம் என்று விலகிச் சென்ற எம்.ஆர்.ராதாவை, 12 வருடங்கள் கழித்து, தன் நேஷனல் பிக்சர்ஸ் ‘ரத்தக்கண்ணீர்’ மூலம் மீண்டும் சினிமாவுக்குக் கொண்டுவந்தார் பெருமாள் முதலியார். 1954ம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது ‘ரத்தக்கண்ணீர்’. ‘பராசக்தி’யை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள். சிதம்பரம் ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமன் படத்துக்கு இசையமைத்திருந்தார். படத்தின் பின்னணி இசை மட்டும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

தோற்றவனின் கதையைப் பெரும்பாலும் சினிமாவில் சொல்லுவதில்லை என்பார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே, வாழ்க்கையின் எல்லா உறவுகளிடமும் உலகத்திடமும் தோற்றுப் போய், வாழ்க்கையையே தொலைத்தவனின் கதையாக போதித்த ‘ரத்தக்கண்ணீர்’ அசுர சாதனை படைத்தது என்றுதான் சொல்லவேண்டும். .

மனைவியாக ஸ்ரீரஞ்சனி, நண்பனாக எஸ்.எஸ்.ஆர்,, சந்திரபாபு முதலானோர் நடித்திருந்தனர். மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் மயங்கிச் சரியும் எம்.ஆர்.ராதாவை ஆட்டுவிக்கும் பதுமையாக எம்.என்.ராஜம் நடித்தார். இவரின் கேரக்டர் பெயரான ‘காந்தா’வும் எம்.ஆர்.ராதா பேசுகிற ‘அடியே காந்தா...’வும் ரொம்பவே பிரபலம். இந்த வார்த்தையைக் கொண்டு இன்றைக்கும் மீம்ஸ்கள், ரீல்ஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கும் படம் ப்ளாஷ்பேக்குடன் முடியும் படம் என்பதும் ஆச்சரிய அதிசயம்தான். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. இதன் பின்னர், எம்.ஆர்.ராதாவுக்கு வரிசையாக படங்கள் வந்தன. வில்லன், குணச்சித்திர கேரக்டர், காமெடி ரோல் என்று வெரைட்டி வெரைட்டியாக வந்தன. வெளுத்து வாங்கினார் ராதா. ‘நான் ‘ரத்தக்கண்ணீர்’ ல ஹீரோவா நடிச்சவன். அதனால ஹீரோவாத்தான் நடிப்பேன்’ என்று முரண்டுபிடிக்காத, அந்த முன் கோப எம்.ஆ.ராதாவிடம் நடிப்புடன் சேர்த்து பலதையும் கற்றுக்கொள்ளவேண்டும் எல்லா நடிகர்களும்..!

பதினேழு ரீல் ஓடுகிற படம் இது. இந்த பதினேழு ரீலுக்குள், எம்.ஆர். ராதா போடுகிற பட்டாசுகளும் அவர் சிகரெட் பிடிக்கிற ஸ்டைலும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பினால், வந்து வந்து ஆடுகிற சுருள்முடியும், நடையும் தோரணையும் நக்கல் பேச்சும் நடிப்பு ராட்சஷன் ராதாவை இன்னும் எத்தனைக் காலமானாலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.

படம் வெளியாகி 72 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்னும் 100 வருடங்களாகும் போதும் என்னைப் போல, உங்களைப் போல,நம்மைப் போல, ‘ரத்தக்கண்ணீர் ராதா’ குறித்து, எழுதிக் கொண்டே இருப்பார்கள். சொல்லிக் கொண்டே இருப்பார்கள். வியந்துகொண்டே இருப்பார்கள்!- வி.ராம்ஜி