மாதவரம் பகுதியில் தொடர் மின்வெட்டு: மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
மாதவரம் பகுதியில் தொடர் மின்வெட்டு: மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
மாதவரம்: மாதவரம் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை மாதவரம், பால் பண்ணை, வடபெரும்பாக்கம், கொசப்பூர், செட்டிமேடு போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் சிறியவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது இரவில் வெப்பக் காற்று வீசுவதால் மின்விசிறி இல்லாமல் வீட்டில் இருக்க முடியாத பொதுமக்கள் பல மணி நேரம் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்கவேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து புகார் கொடுக்க பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை. மின்தடையை சரி செய்வதும் இல்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நள்ளிரவில் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் எம்ஆர்எச் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்வெட்டு குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் மின்தடை சரி செய்யப்பட்டது. அப்போது, தொடர்ந்து மின்தடை செய்தால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என அதிகாரிகளை முன்னாள் எம்எல்ஏ எச்சரித்தார்.
இந்நிலையில் நேற்று வடபெரும்பாக்கம், செட்டிமேடு ஆகிய பகுதிகளில் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதைகண்டித்து பகுதி மக்கள், சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்தடையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்குமேலாக பரபரப்பு நிலவியது.