கும்கும் மோஹோத்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம்
ஜப்பான்: ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அம்பெய்தல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கும்கும் மோஹோத் அரிய சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான தங்கப் பதக்கம் தனிநபர் ‘ரீகர்வ்’ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை அவரைச் சாரும்.
சனிக்கிழமை (அக்டோபர் 3) நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்கொரியாவின் ஓ யெஜினுடன் பொருதிய கும்கும், கடும் நெருக்கடிக்கு இடையே 5-5 எனப் புள்ளிகள் சமநிலையானபோது, ‘ஷூட்-ஆஃப்’ வாய்ப்பில் 10 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
முன்னதாக, அரையிறுதிச் சுற்றில் சீனாவின் ஜிங்யி ஜூவை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி, 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளக் கும்கும் தகுதிபெற்றார். முதல் செட்டை 9, 10, 9 என்ற புள்ளிகளுடன் கைப்பற்றிய அவர், அடுத்தடுத்த செட்களில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிபெற்றார்.
அதற்குமுன், காலிறுதிச் சுற்றில் தம்முடன் பொருதிய உலக வெற்றியாளர் காங் சேயங்கை 6-4 எனக் கும்கும் வீழ்த்தினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ரீகர்வ் அணிப் பிரிவில் தங்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்ற கும்கும், தற்போது தனிநபர் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.