📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 22, 2026 05:04 PM

கடல்துறை சவால்களை எதிர்கொள்ள $60 மில்லியன் கடல்துறை அறிவியல் கழகம்

கடல்துறை சவால்களை எதிர்கொள்ள $60 மில்லியன் கடல்துறை அறிவியல் கழகம்

சிங்கப்பூரிலும் தென்கிழக்காசிய வட்டாரத்திலும் எழக்கூடிய கடல்துறை சவால்களை எதிர்கொள்ள $60 மில்லியன் செலவில் புதிய கடல்துறை அறிவியல் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகளிலும் பருவநிலையிலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் உள்ளிட்ட சவால்களைக் கையாள்வதற்கு உதவும் வகையில், கடல்துறை அறிவியல் தொடர்பான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) அறிமுகம் கண்டுள்ளது.

‘நிமோஸ்’ (NIMOS) என்று அழைக்கப்படும் அந்த தேசிய கடல்துறை, பெருங்கடல் அறிவியல் கழகத்தை தேசிய பூங்காக் கழகமும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இதற்கு முன் செயல்படுத்தப்பட்ட இரண்டு கடல்துறை அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களும் தலா $25 மில்லியன் நிதியுதவியுடன் ஐந்து ஆண்டுகள் நடப்பில் இருந்தன.

அவை இரண்டும் புதிய கடல்துறை வாழ்விடங்களை உருவாக்குவதற்கான நிலையான பொறியியல் நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவது போன்ற சிங்கப்பூரின் உள்நாட்டுச் சவால்களுக்கு அறிவியலைப் பயன்படுத்துவதிலேயே அதிகம் கவனம் செலுத்தின.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நிகழ்ச்சி அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்டுடன் கிட்டத்தட்ட 150 ஆராய்ச்சியாளர்களும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரின் கடல்துறை பகுதிகளில் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்தப் புதிய அறிவியல் கழகம் தொடங்கப்பட்டுள்ளதாக பவளப்பாறை உயிரியலாளரும் ‘நிமோஸ்’ இயக்குநருமான ஹுவாங் டான்வெய் கூறினார்.

வட்டார அளவிலும், கடற்கரை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றத்தால் தென்கிழக்கு ஆசியக் கடற்பகுதிகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிங்கப்பூரில், அண்மையில் அறிவிக்கப்பட்ட புதிய மேற்குத் தீவுக்கான திட்டம் குறித்து குறிப்பிட்ட திரு ஹுவாங், சிங்கப்பூருக்கு நிலையான கடல்துறை அமைப்பை உறுதிசெய்ய விஞ்ஞானிகளுக்கும் அரசு முகமைகளுக்கும் இடையிலான பங்காளித்துவம் எந்த அளவிற்கு அவசியமானது என்பதற்கு இது ஒரு சான்று என்றார்.