கோலாலம்பூர்
சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையேயான எல்லை தாண்டிய சேவைகளை மே மாதம் நிறுத்தியிருந்த ஏரோலைன் பேருந்து நிறுவனம், அவற்றைச் செப்டம்பர் 1ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
இருப்பினும், இது நேரடிச் சேவையன்று. பயணிகள் மலேசியாவில் ஓர் இணைப்புப் பேருந்திற்கு மாற வேண்டியிருக்கும்.
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ஜூரோங் லேக் வட்டாரத்தில் உள்ள பெரென்னியல் பிஸ்னஸ் சிட்டியில் பேருந்தில் ஏறுவார்கள் என்று ஏரோலைனின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அந்தப் பேருந்து சிலாங்கூரில் உள்ள ஐஓஐ சிட்டி கடைத்தொகுதியில் நிற்கும். அங்குப் பயணிகள், கோலாலம்பூரில் உள்ள டிஆர்எக்ஸ் கடைத்தொகுதிக்குச் செல்லும் இணைப்புப் பேருந்திற்கு மாற வேண்டும்.
அதேபோல், டிஆர்எக்சிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் பயணிகள், ஐஓஐ சிட்டி கடைத்தொகுதியில் இணைப்புப் பேருந்திலிருந்து இறங்கி, ஏரோலைன் பேருந்தில் தங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்.
“கோலாலம்பூரையும் சிங்கப்பூரையும் மீண்டும் இணைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று புதன்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் ஏரோலைன் கூறியது.
மேலும், “2026 செப்டம்பர் 1ஆம் தேதி முதல், கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான ஏரோலைனின் எல்லை தாண்டிய பேருந்துச் சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன. இதன் மூலம், எங்களுடனான உங்கள் பயணத்தில் எப்போதுமே ஓர் அங்கமாக இருந்துவரும் வழக்கமான வசதி, கவனிப்பு, விருந்தோம்பலை உங்களுக்கு மீண்டும் வழங்குகிறோம்,” என்று அந்நிறுவனம் கூறியது.