📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News May 30, 2026 02:00 PM

கனடாவாழ் தமிழ்ப் பெண்களுக்கு அங்கீகாரம்

கனடாவாழ் தமிழ்ப் பெண்களுக்கு அங்கீகாரம்

கனடாவாழ் தமிழ்ப் பெண்களுக்கு அங்கீகாரம் வீரம், கல்வி, வளம் - இந்த மூன்று சக்திகளையும் தங்களுக்குள் ஒருங்கிணைத்து, தாங்கள் உயர்வது மட்டுமின்றி, சமுதாயத்தில் சாதிக்கத் துடிக்கும் மற்ற பெண்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக பெண்கள் ஒளிர்கின்றனர். கிழக்கு கனடாவில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தின் லண்டன் மேற்கு தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் பெக்கி சாட்லர். மக்களின் பொதுநல மற்றும் மனநல சுகாதாரம், வாழ்வாதாரம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுக்காகவும், பாலின வன்முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஒண்டாரியோ மாகாணத்தின் லண்டன் மேற்கு தொகுதியில் வாழும் பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 'லீடிங் வுமன் லீடிங் கேர்ள்ஸ்' விருதுகளை வழங்கி, அவர்களை கௌரவிக்கிறார் சாட்லர். சமூக முன்னேற்றத்திற்காக பெண்கள் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புகளையும், பிறரின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் அவர்களின் தலைமைப் பண்பையும் பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2026 'லீடிங் வுமன் லீடிங் கேர்ள்ஸ்' விருதுகள் மொத்தம் 11 பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மூன்று பேர் தமிழ்ப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.வி.ராஜலட்சுமி - தொழில்நுட்ப உலகில் பெண்கள் சாதிக்க முடியும் என்பதை தனது பயணத்தின் மூலம் நிரூபித்து வருபவர் ராஜலட்சுமி. தற்போது ஐபிஎம் நிறுவனத்தில் ஏ.ஐ மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றிவரும் இவர், வங்கி, சுகாதாரம் மற்றும் பொதுத்துறைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியக்கத் தீர்வுகள் மூலம் மாற்றத்தைஉருவாக்கி வருகிறார். தொழில்நுட்பம் என்பது வெறும் கருவி அல்ல; மனிதர்களின் வாழ்க்கையை முன்னேற்றும் சக்தி என்ற நம்பிக்கையுடன் செயல்படும் இவர், பல இளைய மாணவர்களுக்கும், பெண்களுக்கும் ஊக்கமாக உள்ளார். ஐவி ஸ்கூல் ஆப் பிசினஸ் மற்றும் வெஸ்ட்டர்ன் பல்கலைக்கழகத்தில் ஐபிஎம் தூதுவராக செயல்பட்டு, மாணவர்களுக்கு வழிகாட்டல், தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில்வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பெண்களால் நடத்தப்படும் தொடக்கநிலை வணிகங்களுக்கு முதலீடு வழங்கும் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் அவர் செயல்படுகிறார். 'கனவு காணும் பெண்கள், அதை செயல்முறைபடுத்தும் தைரியமும் பெற வேண்டும்' என்ற எண்ணத்துடன், அடுத்த தலைமுறைப் பெண்கள் தொழில்நுட்பத் துறையில் முன்னேற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வழிகாட்டி வருகிறார். இன்றைய இளம்பெண்கள் செயற்கை நுண்ணறிவு, தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உலகில் தங்களுக்கான அங்கீகாரத்தை தைரியமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே ராஜலட்சுமியின் விருப்பம்.​ டாக்டர் மேக்டலீன் தாமஸ் - பான்ஷா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக்கற்றல் பிரிவில் பேராசிரியராக பணியாற்றிவரும் டாக்டர் மேக்டலீன் தாமஸ், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தை இணைக்கும் பாலமாக விளங்குகிறார். இந்தியா, ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தொடர்பு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 'STEM' துறையில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு என்ற ஆண்களே மேலாதிக்கம் செலுத்தும் துறையில், ஒரு புலம்பெயர்ந்த பெண்ணாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை பெண்களுக்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார். திட்ட ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று, எண்ணற்ற மாணவர்களை வழிநடத்தி, அவர்களின் திட்டங்களை தொழில்முனைவோர் வாய்ப்புகளாகவும், நிதி உதவிதிட்டங்களாகவும் மாற்றியுள்ளார். 'AI-gnite' என்ற மாணவர் கண்காட்சியை நடத்தி, இளம்மாணவர்களின் கண்டுபிடிப்புகளை தொழில்துறை வல்லுனர்களிடம் கொண்டு சேர்க்கிறார். இது மட்டுமல்லாமல், கனடாவிற்கு புதிதாக குடிபெயரும் பெண்களுக்கு வழிகாட்டியாகவும், சமூக சேவையில் பங்களிப்பாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தங்களின் தொழிற்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான தன்னம்பிக்கையை பெண் மாணவர்களிடையே வளர்த்து வருகிறார். 'இந்த விருது எனக்கானது மட்டுமல்ல, தடைகளை உடைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், STEM துறையில் தன் வழியைத் தானே வகுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது. நான் உயரும்போது, என்னோடு மற்றவர்களையும் உயர்த்துவதே என் கடமை.' என்று உரத்த குரலில் சொல்லும் இவர், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதற்கேற்ப, மூன்று நாடுகளில் கற்று கனடாவில் வேரூன்றி, எல்லை தாண்டி ஒரு வழிகாட்டி விளக்காக விளங்குகிறார். சவீதா கந்தசுவாமி - இவர் ஒரு விவசாய விஞ்ஞானி. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதுடன், கனடாவில் உள்ள டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியும் பயின்றுள்ளார். விவசாயிகளின் நலனுக்காகவும், நவீன விவசாய முன்னேற்றத்திற்காகவும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறார். ஏஅன்ட்எல் கனடா ஆய்வகத்தில் மண்வளம் மற்றும் பயிர் பாதுகாப்பு தொடர்பாக பல முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டார். தற்போது உலகளவில் பயிர் பாதுகாப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யுபிஎல் நிறுவனத்தின் உயிரியல் பயிர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இயற்கை மற்றும் உயிரியல் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் நிலைத்த விவசாய முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். 'ரீபாரஸ்ட் லண்டன்' அமைப்பில் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், அறிவியல் பங்களிப்பாளராகவும் செயல்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற வன வள மேம்பாட்டிற்கும் பங்களித்து வருகிறார். 'லீடிங் வுமன் லீடிங் கேர்ள்ஸ் 2026' விழா மே மாதம் 20ஆம் தேதி கனடாவின் லண்டன் நகரில் கோலாகலமாக நடைபெற்றது இந்த விருதுகள் வழங்கும் விழா. 'வாரியர் வுமன் ஆப் பாசிட்டிவ் ட்ரம்' என்னும் பழங்குடியின பெண்கள் குழுவின் அமர்க்களமான ட்ரம்ஸ் இசை, அரங்கத்தை அதிர வைத்து, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தது. எம்பிபி பெக்கி சாட்லர் சிறப்பான முதன்மை உரையாற்றி, விருதுகளை பெறும் பெண்களை வாழ்த்தினார். விருது பெறும் சாதனைப் பெண்களைப் பற்றிய காணொளி ஒளிபரப்பப்பட்டது. விருதுகள் பெற்ற பதினொரு சாதனைப் பெண்களும் நன்றியுரை ஆற்றினர். தங்களின் குடும்பத்தினருடன் உற்சாகமாக படங்கள் எடுத்துக் கொண்டனர். 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!- கனடாவில் இருந்து நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா